கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக ஆட்டோ டிரைவர்களிடம் ரூ.10 லட்சம் மோசடி
கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஆட்டோ டிரைவர் களிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண் விரிவுரையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி:
கல்லூரி விரிவுரையாளர்
தேனி அருகே உள்ள சங்ககோணாம்பட்டியை சேர்ந்த நீலகண்டன் மகன் அழகுராஜா (வயது 27). ஆட்டோ டிரைவர். இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பாரதிநகரை சேர்ந்த ஞானசேகரன் மனைவி சாந்தி. இவர், அப்பகுதியில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது கணவரின் சொந்த ஊரான தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் மூலம், சாந்தி அறிமுகம் ஆனார்.
போலி பணிநியமன உத்தரவு
சாந்திக்கு அரசு உயர் அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், அதை பயன்படுத்தி சேலம் கோர்ட்டில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாகவும் அந்த டிரைவர் கூறினார். அதை நம்பிய நானும், ஆட்டோ டிரைவர்கள் 2 பேரும் வேலைக்காக சாந்தியை சந்தித்தோம்.
வேலை வாங்கிக் கொடுக்க பணம் கேட்டதால், 3 பேரும் சேர்ந்து மொத்தம் ரூ.13 லட்சத்து 70 ஆயிரத்தை சாந்தியிடம் கொடுத்தோம். ஆனால் எனக்கு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.
இந்நிலையில், சக ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு பணிக்கான உத்தரவை வழங்கினார். அந்த உத்தரவுடன் அந்த டிரைவர் சேலம் கோர்ட்டுக்கு சென்ற போது அது போலியான பணி நியமன உத்தரவு என்று தெரியவந்தது.
ரூ.10 லட்சம் மோசடி
இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் சாந்தியிடம் பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மட்டும் திருப்பிக் கொடுத்தார். மீதம் ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்தை திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், சாந்தி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமைராஜ் நேற்று வழக்குப்பதிவு செய்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story