ஆன்மிக நிகழ்ச்சிகளில் தி.மு.க. தலையிடக்கூடாது
ஆன்மிக நிகழ்ச்சிகளில் தி.மு.க. தலையிடக்கூடாது என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கூறினார்.
அருப்புக்கோட்டை,
பாரம்பரியமாக நடக்கக்கூடிய ஆன்மிக நிகழ்ச்சிகளில் தி.மு.க. தலையிடக்கூடாது என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
அருப்புக்கோட்டையில் பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்தும், சிறு குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்டஓ.பி.சி. அணி செயலாளர் காளிமுத்துக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் தாஸ்வின், ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தலையிடக்கூடாது
பின்னர் பேராசிரியர் ராம.சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு தூக்க கூடாது என பட்டின பிரவேசத்திற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதை பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதுபோல் பாரம்பரியமாக நடக்கக்கூடிய ஆன்மிக நிகழ்வுகளில் தி.மு.க. தலையிடக்கூடாது. அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அழகருடன் சேர்ந்து அர்ச்சகரை பக்தர்கள் சுமக்கிறார்கள். அப்படி என்றால் அழகர் திருவிழாவை நிறுத்தி விடலாமா? அல்லது அர்ச்சகரை கீழே இறக்கிவிடலாமா?.
தமிழர் பண்பாட்டின் மீது தி.மு.க. நடத்தி வரும் தாக்குதலுக்கு அரசியல் ரீதியாக பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவாக நடத்தி வருகிறது. ஜப்பான் நிதி கூடுதல் பலன் கொடுக்கும். தி.மு.க.வின் ஒரு ஆண்டு கால ஆட்சியில் மின்வெட்டு, வரி உயர்வு, பெண்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட அனைத்திலும் தோற்றுவிட்டது என்று கூறினார்.
Related Tags :
Next Story