ஒரு மாதமாக பின்தொடர்ந்ததாக கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்


ஒரு மாதமாக பின்தொடர்ந்ததாக கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 6 May 2022 12:02 AM IST (Updated: 6 May 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் நகை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கைதான 2 பேரும், கடந்த ஒரு மாதமாக பின்தொடர்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் நகை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கைதான 2 பேரும், கடந்த ஒரு மாதமாக பின்தொடர்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.

நகை கொள்ளை முயற்சி

கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ரகுராம். நகைக் கடை நடத்தி வருகிறார். மேலும் அதேப் பகுதியில் உள்ள ராஜு என்பருக்கு சொந்தமான நகை பட்டறையில் தங்கத்தை கொடுத்து நகைகளாக மாற்றி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகிறார். அதன்படி 2 நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து, அய்யனார் ஆகிய இருவரும் 8½ கிலோ தங்க நகைகளை எடுத்துக் கொண்டு சென்னைக்கு சென்றனர்.

2 பேர் கைது

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றபோது 2 வாலிபர்கள், மாரிமுத்து, அய்யனார் ஆகியோர் மீது ஸ்பிரே அடித்து நகைகளை கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர். முடியாததால் அவர்கள் தப்பி ஓடினர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த அஷ்ரப், சூரஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் சேலம் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

ஒரு மாதமாக...

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நகை செய்து கொடுக்கும் ராஜு என்பவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த அஷ்ரப், சூரஜ் ஆகிய 2 வாலிபர்களிடம், ரகுராம் தங்க நகைகளை பல்வேறு பகுதிகளுக்கு ஆட்கள் மூலம் அனுப்புவது குறித்தும், அதனை கொள்ளையடித்து அனைவரும் பிரித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

அதன்படி அஷ்ரப், சூரஜ் ஆகிய இருவரும் ஒரு மாதமாக எங்கெங்கு நகைகள் கொண்டு செல்கிறார்கள் என்பதை பின்தொடர்ந்து கண்காணித்து நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
8½ கிலோ நகை
வேலூர் மாவட்ட வணிக வரி குழுவினர் சுப்புராயன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் நகைகளின் தரம், எடை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது 8 கிலோ 554 கிராம் நகை இருந்தது. ஆய்வின்போது ஜோலார்பேட்டை ரெயில்வே இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் ரெயில்வே போலீசார் உடன் இருந்தனர்.
 மேலும் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டவர்களுக்கு தகவல் கொடுத்த நகை பட்டறை கடையின் உரிமையாளர் ராஜூவை தேடி வருகின்றனர். ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஓடும் ரெயிலில் 8½ கிலோ தங்க நகை கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story