கீரனூர் அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நெடுங்கற்கள்-கல்வட்டங்கள் கண்ெடடுப்பு
கீரனூர் அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நெடுங்கற்கள், கல்வட்டங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஆவூர்:
நெடுங்கற்கள், கல்வட்டங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே விராலிமலை ஒன்றியம் பாலாண்டாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வடக்கு பாரப்பட்டி கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னமான நெடுங்கற்கள் மற்றும் கல்வட்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்பகுதியை சுற்றி தொடர்ச்சியாக தொல்லியல் தடயங்கள் கண்டெடுக்கப்படுவது இப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்கள் கீரனூர் முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் கூறியதாவது:-
தடயங்கள் பாதுகாக்காமல் உள்ளது
பொதுவாகவே இந்த நெடுங்கல் அமைப்பின் காலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவே தொல்லியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. ஒரு இடத்தில், பெரிய தலைவனோ அல்லது அப்பகுதியில் முக்கிய நபர் இறந்து விட்டால் அவனையும் அவன் பயன்படுத்திய பொருட்களையெல்லாம் ஒரு பெரிய தாழியில் இட்டுப் புதைத்து அதைச் சுற்றிலும் செம்புறாங் கற்களை வட்டமாக வைத்து, மேற்பகுதியில் 10 முதல் 15 டன் எடையுள்ள ஒரு பெரிய கல்லை அடையாளமாக நட்டு வைப்பது வழக்கமாக இருந்து வந்தது. இன்றும், தமிழகத்தின் பல கிராமங்களில் இந்த நெடுங்கல் அல்லது குத்துக்கல் அமைப்பானது, மூத்தோர் வழிபாட்டு முறையின் ஒரு அங்கமாக உள்ளது.
"நட்டபோலும் நடாஅ நெடுங்கல்"என்ற அகநானூற்றின் வரியும் இதையே குறிக்கிறது. சமீபத்தில், இப்பகுதிக்கு மிக அருகில், ஆலங்குடிப்பட்டியில் கல்வட்டங்கள், மருங்கிபட்டியில் 12-ம் நூற்றாண்டின் ஆசிரியம் கல்வெட்டு, லட்சுமணன்பட்டியில் பல்லவர்கால அய்யனார் சிற்பம் என பல்வேறு தொல்லியல் தடயங்களை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வில் கண்டெடுத்து உள்ளதால் இப்பகுதியில் அகழாய்வு செய்யும் பட்சத்தில் இன்னும் பல முக்கிய வரலாற்று தடயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. சமீபத்தில் கண்டெடுத்த மேற்கண்ட தொல்லியல் தடயங்கள் எதனையுமே தொல்லியல்துறை இந்நாள்வரை பாதுகாக்காமல், இருப்பது வேதனையாக உள்ளது.
கோரிக்கை
தற்போது இந்த பெருங்கற்படை ஈமச் சின்னமான இந்த நெடுங்கல் அமைப்பைச் சுற்றிலும் பல கல்வட்டங்கள் இருந்ததற்கான அடையாளம் இன்றும் பெருமளவில் காணப்படுகிறது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த தொல்லியல் தடயங்களை, உடனடியாக தொல்லியல்துறை வேலியிட்டு பாதுகாக்கவேண்டும் என பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story