குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது
குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. 22 ஆயிரத்து 938 மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. 22 ஆயிரத்து 938 மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுத இருந்தனர். ஆனால் 8 லட்சம் பேர் மட்டுமே எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவு பெற்றது.
குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை மற்றும் திருவட்டார் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் மொத்தம் 85 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத மொத்தம் 23 ஆயிரத்து 296 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது.
இதில் 22 ஆயிரத்து 938 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 358 பேர் தேர்வு எழுதவில்லை.
முன்னதாக மாணவ-மாணவிகள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தேர்வு மையங்களில் காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மாணவ-மாணவிகள் தேர்வறைக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து 9.55 மணிக்கு 2-வது மணி 2 முறை அடிக்கப்பட்டது. அப்போது அறை கண்காணிப்பாளர் வினாத்தாள் உறைகளைப் பிரித்தனர். காலை 10 மணிக்கு 3-வது மணி 3 முறை அடிக்கப்பட்டது. அப்போது மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. வினாத்தாளை மாணவர்கள் காலை 10 மணியில் இருந்து 10.10 மணி வரை படித்து பார்த்தனர். அதன் பிறகு காலை 10.10 மணிக்கு 4-வது மணி 4 முறை அடிக்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டது. பின்னர் 10.15 மணிக்கு 5-வது மணி 5 முறை அடிக்கப்பட்டதும் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத தொடங்கினர்.
பெற்றோரிடம் ஆசி
முன்னதாக தேர்வு எழுதுவதற்காக மாணவ-மாணவிகள் காலை 9 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்தனர். பல்வேறு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் பயமின்றி ஆர்வமுடன் தேர்வு எழுத வந்ததை பார்க்க முடிந்தது. மாணவ-மாணவிகளை இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் பெற்றோர் அழைத்து வந்து தேர்வு மையத்தில் விட்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டு இருந்த தேர்வறை விவரத்தை பார்த்து தேர்வறைக்கு சென்றனர். தேர்வு மையத்திற்கு சென்றபோது மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் ஆசி பெற்று சென்றனர். தேர்வை நல்ல படியாக எழுதும்படி மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தேர்வறைக்குள் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் தேர்வறையில் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
தேர்வு மையத்திற்குள் மாணவ-மாணவிகள் மற்றும் தேர்வு கண்காணிப்பு ஆசிரியர்களைத் தவிர மற்றவர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. அதோடு தேர்வை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர் அனிதா தலைமையிலும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையிலும் தனி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு மாற்றுத் திறனாளி சலுகை கோரி 106 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். 73 மாணவ-மாணவிகளுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தேர்வெழுத கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி 67 மாணவ-மாணவிகளுக்கும், 43 மாணவ-மாணவிகளுக்கு மொழிப்பாடம் விலக்களித்தும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி உள்பட பலர் உடனிருந்தனர்.
விடைத்தாள்
தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் டதி பள்ளிக்கும், தக்கலை கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் தக்கலை அமலா கான்வென்டுக்கும், குழித்துறை கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலை பள்ளிக்கும், திருவட்டார் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் படந்தாலுமூடு திரு இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கும் கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் 2 மையங்களில் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது நாகர்கோவில் டதி பள்ளியிலும், திருத்துவபுரம் புனித ஜோசப் பள்ளியிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது.
Related Tags :
Next Story