நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தவில்லை: அரசு போக்குவரத்து கழகத்தை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளால் பரபரப்பு அறிவிப்பு பதாகை வைத்து சென்றனர்
புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகம் நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாததால் ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள் அறிவிப்பு பதாகை வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
சொத்து வரி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை மண்டலம் சார்பில் டி.வி.எஸ். கார்னர் மற்றும் பஸ் நிலையத்தில் கட்டிடம் உள்ளது. அந்தக் கட்டிடத்திற்கு நகராட்சிக்கு சொத்து வரி கட்ட வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணியாளர்களின் சம்பளத்தில் தொழில் வரி பிடித்தம் செய்யப்பட்டு அதை மொத்தமாக நகராட்சிக்கு மாதந்தோறும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரிகள் கட்ட வேண்டும்.
வரி பாக்கி
ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.2 லட்சம் மதிப்பிலான சொத்து வரி கட்டவில்லை. அதேபோல் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.83 லட்சம் மதிப்பிலான தொழில் வரியையும் நகராட்சிக்கு அரசு போக்குவரத்து கழகம் செலுத்தவில்லை.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் பலமுறை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியும், இதுவரை சொத்து வரி மற்றும் தொழில் வரி கட்டவில்லை. அதை தொடர்ந்து நேற்று புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தை ஜப்தி செய்ய வருவாய் அலுவலர் விஜயஸ்ரீ தலைமையில் அதிகாரிகள் வந்தனர்.
அறிவிப்பு பதாகை
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சொத்து வரி மற்றும் தொழில் வரி கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டனர். ஆனால் கால அவகாசம் கொடுக்க முடியாது என்று கூறி மூன்று தினங்களுக்குள் சொத்து வரி மற்றும் தொழில் வரியை கட்டாமல் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தல் அடங்கிய அறிவிப்பு பதாகையை அரசு போக்குவரத்துக்கழக வாயில் முன்பாக வைத்து விட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Related Tags :
Next Story