ஒரே பெண்ணை காதலிப்பதில் நண்பர்கள் இடையே மோதல் ஒருவர் காயம்; 2 பேர் கைது


ஒரே பெண்ணை காதலிப்பதில் நண்பர்கள் இடையே மோதல் ஒருவர் காயம்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 May 2022 12:40 AM IST (Updated: 6 May 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு அருகே ஒரே பெண்ணை காதலிப்பதில் நண்பர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மணவாளக்குறிச்சி, 
மண்டைக்காடு அருகே ஒரே பெண்ணை காதலிப்பதில் நண்பர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
இளம்பெண்ணுடன் காதல்
மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடியை சேர்ந்தவர் ஷைஜூ (வயது20). இவரும் சுண்டவிளையை சேர்ந்தவர் சதீஷ்குமாரும் (21) நண்பர்கள். இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். 
ஷைஜூவுக்கும் பள்ளியாடியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராம் மற்றும் போன் மூலம் காதலை வளர்த்து வந்தனர்.
இதுகுறித்து ஷைஜூ, நண்பர் சதீஷ்குமாரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் ஷைஜூ காதலித்த அதே இளம்பெண்ணை சதீஷ்குமாரும்  இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு காதலிக்க தொடங்கினார். இது தொடர்பாக நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், ஷைஜூவை பழிவாங்க தீர்மானித்தார். 
மது விருந்து
இதையடுத்து ஷைஜூவை மது விருந்துக்கு வருமாறு அழகன்பாறை காளிவிளை பகுதிக்கு அழைத்தார். இந்த விருந்தில் ஷைஜூவுடன், சதீஷ்குமார் மற்றும் நண்பர்கள் அழகன் பாறை காளிவிளையை சேர்ந்த ஆனந்தராஜ் (23), நெய்யூரை சேர்ந்த விஷ்ணு (22), முரசங்கோடு பகுதியை சேர்ந்த சஞ்சய், குழித்துறையைச் சேர்ந்த ராகுல் ஆகியோரும் கலந்து கொண்டனர். அனைவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.  இதையடுத்து ஷைஜூவிடம், நீ காதலிக்கும் இளம்பெண்ணை மறந்துவிட வேண்டும் என்றும், மீறி காதலித்தால் கொன்று விடுவோம்  என்றும் சதீஷ்குமார் மிரட்டினர். மேலும் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் உள்பட நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து ஷைஜூவை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார். 
2 பேர் கைது 
இந்த மோதல் சம்பவத்தை நண்பர்களில் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது. இதை பார்த்த மண்டைக்காடு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்கள் ஷைஜூவிடம் புகார் மனுவை பெற்று 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
 இதில் சதீஷ்குமார் மற்றும் ஆனந்தராஜை கைது செய்தனர். மற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story