பிளஸ்-2 தேர்வு பயத்தில் மாணவர் தீக்குளித்து தற்கொலை


பிளஸ்-2 தேர்வு பயத்தில் மாணவர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 May 2022 1:39 AM IST (Updated: 6 May 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 தேர்வு பயத்தில் மாணவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற சப்-இன்ஸ்பெக்டரும் காயம் அடைந்தார்.

மதுரை,

பிளஸ்-2 தேர்வு பயத்தில் மாணவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற சப்-இன்ஸ்பெக்டரும் காயம் அடைந்தார்.

பிளஸ்-2 மாணவர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிபாபு, நெசவு தொழிலாளி. இவருடைய மகன் சஞ்சய் (வயது 17). பிளஸ்-2 படித்து வந்தார். இவர் ஊரில் இருந்தால் சரியாக படிக்கமாட்டார் என்று கருதி, அவரது பெற்றோர் நினைத்தனர். ஆதலால் அவரை படிக்க வைப்பதற்காக பெற்றோர் அவனியாபுரத்தில் உள்ள உறவினரான சப்-இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி வீட்டிற்கு கடந்த 1-ந் தேதி அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து சஞ்சய் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் மகனை பார்ப்பதற்காக பெற்றோர் நேற்று முன்தினம் இரவு அவனியாபுரத்திற்கு வந்தனர். அங்கு சஞ்சையிடம் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கிய நிலையில் சஞ்சய் மட்டும் தனி அறைக்கு சென்று தமிழ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.

தீக்குளித்து சாவு

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திடீரென்று அவரது அலறல் சத்தம் கேட்டு அனைவரும் எழுந்துள்ளனர். அப்போது தனி அறையில் இருந்து உடல் முழுவதும் தீ பிடித்த நிலையில் சஞ்சய் வெளியே ஓடி வருவதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி காப்பாற்ற முயன்றார்.
தீைய அணைத்து மாணவரை மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எல்லீஸ்நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜபாண்டியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலன் அளிக்காமல் சஞ்சய் பரிதாபமாக இறந்தார்.

தேர்வு பயத்தில் தற்கொலை

இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு பயத்தில் சஞ்சய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story