ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா


ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 6 May 2022 1:49 AM IST (Updated: 6 May 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது

திருவையாறு
திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
முன்னதாக கொடிமரத்திற்கு பால், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நான்கு வீதிகளில் கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
இதில், தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கோவில் திருவிழா வருகிற 17-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
13-ந் தேதி தேரோட்டம்
 விழாவையொட்டி, வருகிற 9-ந் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று 6 ஊர்களை சேர்ந்த சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் எழுந்தருளி சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது. 13-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் வருகிறார்.
சப்தஸ்தானம் 
 அதைத்தொடர்ந்து 16-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. அன்று இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெறுகிறது.  மறுநாள் 17-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை 27-வது தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 


Next Story