மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகளுக்கு ஜப்பான் நிறுவனம் ரூ.1627 கோடி ஒதுக்கீடு


மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகளுக்கு ஜப்பான் நிறுவனம் ரூ.1627 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 6 May 2022 1:56 AM IST (Updated: 6 May 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தோப்பூரில் கட்டப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும், இதற்கு ஜப்பான் நிறுவனம் ரூ.1627 கோடி ஒதுக்கி இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை, 

மதுரை தோப்பூரில் கட்டப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும், இதற்கு ஜப்பான் நிறுவனம் ரூ.1627 கோடி ஒதுக்கி இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் தொடங்குவதில் தாமதம் நீடித்ததால், இதுதொடர்பாக மதுரை எம்.பி. வெங்கடேசன் மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியிருந்தார். 
மேலும், இந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் விதி 377-ன் கீழ் கேள்வியும் எழுப்பி இருந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக செயலாளருக்கு கடிதம் எழுதினார். தற்போது, அவரது கடிதத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பாரதி பிரவீன் குமார், துறை செயலாளர் ராஜேஷ் பூசன் ஆகியோர் பதில் அனுப்பியுள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-
 மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்டத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் திட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜப்பானின் சர்வதேச கடன் முகமை (ஜைக்கா) அமைப்பின் கடனுக்கான முதற்கட்ட ஆய்வுப்பணிக்குழுவினர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரை வந்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, கடனுக்கான ஒப்பந்தம் கடந்த 26.3.2021-ல் ைஜக்காவுடன் கையெழுத்தானது. அதன்படி, மொத்த நிதித்தேவைக்கான ரூ.1977.80 கோடியில், ஜைக்கா நிறுவனம் ரூ.1627.70 கோடி கடனாக வழங்கப்படும். மீதித்தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்படும்.

சர்வதேச டெண்டர் 

இந்த கடன் ஒப்பந்தத்தின்படி கடனுக்கான தொகைைய ஜைக்கா நிறுவனம் ஒதுக்கீடு செய்ததால், வருகிற 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும். இதில், ஆஸ்பத்திரி வளாகத்தின் சுற்றுச்சுவர் உள்ளிட்ட முன்கட்ட பூர்வாங்க பணிகளில் 92 சதவீத பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இதற்காக, திட்டப்பிரிவு உருவாக்கப்பட்டு நிர்வாக இயக்குனர், துணை இயக்குனர், கண்காணிப்பு என்ஜினீயர், நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திட்ட மேலாண்மைக்கான ஆலோசகரை முடிவு செய்ய சர்வதேச டெண்டர் விடப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், தமிழக அரசின் ஆலோசனைப்படி, நடப்பு கல்வியாண்டில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு எம்.பி.பி.எஸ். பாடப்பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
நீண்ட நாள் கனவு
இது குறித்து எம்.பி. வெங்கடேசன் கூறும்போது, “எய்ம்ஸ் ஆஸ்பத்திரி என்பது மதுரை மற்றும் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாளைய கனவாகும். இதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். நிர்வாக ரீதியான முடிவுகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் மதுரை எய்ம்ஸ் பற்றி ஏதாவது ஒருவகையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறோம். ஆஸ்பத்திரி பணிகள் மேலும் தாமதமாகாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம்” என்றார்.

Next Story