கொள்ளிடம் ஆற்றில் மணல் ஏற்ற வந்தவர்களை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் ஏற்ற வந்தவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
திருக்காட்டுப்பள்ளி
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவிலடி கொள்ளிடம் ஆற்றில் நேற்று திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் சிலர் மணல் அள்ள வந்தனர். இதனைக்கண்ட கோவிலடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமையில் பொதுமக்கள் ஒன்றுகூடி மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது மணல் அள்ள வந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் தங்களுக்கு பொதுப்பணித் துறையில் இருந்து வந்த தகவலின்பேரில் மணல் அள்ள வந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர் ராஜா, திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன், பூதலூர் தாசில்தார் பிரேமா, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா ஆகியோர் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
பேச்சுவார்த்தை
பின்னர், மாட்டு வண்டி உரிமையாளர்கள், கோவிலடி பொதுமக்கள் ஆகியோரிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாட்டுவண்டி உரிமையாளர்கள் தாங்கள் நீண்ட தொலைவிலிருந்து வந்து விட்டதாகவும், தங்களுக்கு மணல் ஏற்றிச் செல்ல அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மாட்டுவண்டி உரிமையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் மணல் அள்ள அனுமதி அளிப்பது, மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்றும், முறையான அனுமதிக்கு பின்னர் மணல் குவாரி திறக்கப்பட்டு சேமிப்பு மையங்களில் மணல் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து மாட்டு வண்டிகளுக்கு மணல் தருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று ஆன்லைனில் பதிவு செய்திருந்த 105 மாட்டு வண்டிகளுக்கு மட்டும் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று காலை முதல் கோவிலடி கொள்ளிடம் ஆற்று பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story