பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதிதாக கட்டப்படும் சாரதா கோவில்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதியதாக சாரதா கோவில் கட்டப்படுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் காஷ்மீர் பண்டிட் கூறினார்.
பெங்களூரு:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதியதாக சாரதா கோவில் கட்டப்படுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் காஷ்மீர் பண்டிட் கூறினார்.
ரவீந்தர் பண்டிட்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தீட்வல் என்ற பகுதியில் சாரதா கோவில் நிறுவப்படுகிறது. இதற்கான சாமி சிலை கட்டமைப்பை வடிவமைக்கும் பணி பெங்களூருவில் உள்ள மாகடி பகுதியில் நடந்து வருகிறது. அந்த பணிகளை சேவ் சாரதா குழு தலைவரும், காஷ்மீர் பண்டிட்டுமான ரவீந்தர் பண்டிட் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சாரதா கோவில்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாரதா கோவில் உள்ளது. அந்த கோவில் மூடப்பட்டு உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு எட்டப்பட்டு 72 ஆண்டுகளுக்கு பிறகு கர்த்தார்பூர் குருத்வாரா கோவில் திறக்கப்பட்டது.
அதேபோல் சாரதா கோவிலும் திறக்கப்பட வேண்டும். இதன்மூலம் காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் இந்துக்கள் அங்கு சென்று வழிபடுவார்கள்.
விசா தேவை இல்லை
இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லை பகுதியில் வசிப்பவர்கள் எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி வசிக்கும் உறவினர்களை சந்திக்க அனுமதி அளிப்பது என்பது இருதரப்பிலும் ஒப்புக்கொண்டுள்ளன.
இதற்கு தனியாக விசா பெற தேவை இல்லை. அதுபோல் சாரதா கோவிலுக்கு செல்லவும் அனுமதி அளிக்க வேண்டும். தற்போது உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி வழங்கப்படும் அனுமதி விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும். உள்துறை அமைச்சகம் பண்டிட்டுகளுக்கு அனுமதி வழங்கியது. வெளியுறவுத்துறையும் இதை கவனிக்கிறது. ஆனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
சாரதா சாமியை வழிபடும் பக்தர்கள் மற்றும் அனைத்து சங்கராச்சாரியார்கள் குரல் எழுப்பும் வரை எதுவும் நடைபெறாது. பழமை வாய்ந்த இந்த சாரதா கோவிலில் கடந்த 72 ஆண்டுகளாக பிரார்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் அங்கு பிரார்த்தனைகள், பூஜைகள் நடைபெற வேண்டும்.
பஞ்சலோக சாமி சிலை
அங்கு ரூ.1.20 கோடி செலவில் 4,500 சதுரஅடி பரப்பளவில் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு சிருங்கேரியில் உள்ள சாரதா மடம் உதவி செய்கிறது. பஞ்சலோக சாமி சிலையும் அந்த மடம் தான் வழங்குகிறது. கோவில் கட்டமைப்பு மாகடியில் உருவாக்கப்படுகிறது. 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த பணிகள் முடிவடைந்ததும் இதை 45 நாட்களில் அங்கு கொண்டு செல்வோம்.
இவ்வாறு ரவீந்தர் பண்டிட் கூறினார்.
Related Tags :
Next Story