ஈரோட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு: விரைவில் பாலித்தீன் கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை- மாநகராட்சி அதிகாரி தகவல்
ஈரோட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக விரைவில் பாலித்தீன் கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
ஈரோடு
ஈரோட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக விரைவில் பாலித்தீன் கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் மாசு
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பாலித்தீன் குப்பைகள் சேருவதால் அனைத்து பகுதிகளிலும் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் பயன்படுத்திவிட்டு போடும் மக்காத பாலித்தீன் பைகள் சாக்கடை கால்வாய்கள், நீரோடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தேங்கி நீரோட்டத்தை தடுக்கிறது. இதனால் கழிவுகள் ஆங்காங்கே அப்படியே சேர்ந்து சாக்கடை அடைப்பு ஏற்படுத்துகிறது.
மழைக்காலத்தில் பெருகி வரும் மழை வெள்ளம் சாக்கடை கால்வாய், மழை நீர் ஓடைகளில் செல்ல முடியாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதும், தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் சென்று பாதிப்பு ஏற்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. வெயில் காலங்களில் அடிக்கும் காற்றில் பாலித்தீன் பைகள் காற்றில் பறந்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துகின்றன. இதனால் பாலித்தீன் பைகளின் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்து உள்ளது.
கோரிக்கை
இந்தநிலையில் நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் நந்தகோபு என்பவர் ஒரு கோரிக்கையை எழுப்பினார். அவர் பேசும்போது, ஈரோடு மாநகராட்சியில் பாலித்தீன் தடுப்பு என்ற பெயரில் அதிகாரிகள் சிறு வியாபாரிகள், கடைநிலையில் இருக்கும் வியாபாரிகளிடம் சோதனை செய்து அவர்களிடம் இருந்து பாலித்தீன் பைகளை கைப்பற்றி அபராதம் விதிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாள் விற்பனையே ரூ.500 தான் இருக்கும். அவர்களுக்கு ரூ.1000 அபராதம் என்று மிரட்டுவது சரியல்ல. பாலித்தீன் பைகள் எங்கே தயாரிக்கப்படுகிறது. எங்கே சேமித்து வைக்கிறார்கள். பெரிய அளவில் விற்பனை செய்பவர்கள் யார் என்பது அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்காது. எனவே சிறு வியாபாரிகளுக்கு சிரமம் கொடுப்பதை தவிர்த்து, மொத்த உற்பத்தியை தடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
கிடங்குகளுக்கு சீல்
அதற்கு பதில் அளித்து ஈரோடு மாநகராட்சி நகர் நல அதிகாரி டாக்டர் பிரகாஷ் பேசினார். அவர் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சி மற்றும் மாநகராட்சியை ஒட்டி உள்ள கிராமப்புறங்களில் பாலித்தீன் உற்பத்தி நிலையங்கள் எங்கெல்லாம் செயல்படுகிறது என்பதையும், எங்கு சேமித்து வைக்கப்படும் கிடங்குகள் இருக்கின்றன என்பதையும் நாங்கள் கண்டறிந்து வைத்து இருக்கிறோம்.
இது சாதாரணமாக நடைபெறவில்லை. காவல்துறை குற்றவழக்கில் புலனாய்வு செய்வது போன்று ஒரு குழு அமைத்து தீவிரமாக கண்காணித்து இந்த இடங்களை உறுதி செய்து இருக்கிறோம். மிக விரைவில் பாலித்தீன் கிடங்குகளில் இருந்து சட்டத்துக்கு விரோதமான பாலித்தீன் பைகள் கைப்பற்றப்பட்டு, கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story