‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதார சீர்கேடு
தர்மபுரி அன்னசாகரம் பகுதியில் மயானத்திற்கு செல்லும் சாலையோரம் உள்ள காம்பவுண்ட் சுவர் பகுதியில் தினமும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. சிலர் தீ வைத்து எரிப்பதால் சுற்றுவட்டார பகுதியில் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடு காரணமாக அருகே உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை சாலையில் கொட்டாமல் இருக்க தேவையுள்ள இடங்களில் குப்பை தொட்டிகளை அமைக்க வேண்டும்.
-ஆனந்தன் அன்னசாகரம், தர்மபுரி.
===
அதிக வேகம் ஆபத்து
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடி அருகே அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த சுங்கச்சாவடி வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த வழியாக தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவேண்டும். அந்த வழியாக வரும் வாகனங்கள் அதிக வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஷாஜகான், கிருஷ்ணகிரி.
===
வேகத்தடைகள் அமைக்கப்படுமா?
கூனவேலம்பட்டி புதூருக்கு செல்லும் வழியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகே புகழ்பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் பள்ளி அருகில் மிக வேகமாக வரும்பொழுது மாணவர்கள் சாலையை கடக்க மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி அந்த பகுதியில் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நித்திஷ்ராஜா, கூனவேலம்பட்டிபுதூர், ராசிபுரம்.
===
தெருநாய்கள் தொல்லை
சேலம் சூரமங்கலம் அடுத்துள்ள ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லும்போது, வாகனங்களில் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் சாலையில் செல்லும்போது தெருநாய்கள் துரத்தி வருவதால் அச்சத்துடன் செல்ல வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், சூரமங்கலம்.
===
சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த சாமிநாயக்களன்பட்டி பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் அந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் தெருவில் பொதுமக்கள், வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சாமிநாயக்கன்பட்டி, சேலம்.
சேலம் மாவட்டம் சேலத்தாம்பட்டி கிராமத்தில் சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைக்க முன் வருவார்களா?
-நடராஜ், சேலத்தாம்பட்டி, சேலம்.
===
குரங்குகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் சந்தாபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. அந்த குரங்குகள் விவசாயம் தோட்டத்தில் உள்ள வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்துகின்றன. மேலும் வீட்டின் உள்ளே புகுந்து பொருட்களை எடுத்து கீழே போட்டுவிட்டு செல்கின்றன. சம்பந்தப்பட்ட துறையினர் குரங்களை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், சந்தாபுரம், கிருஷ்ணகிரி.
====
ஆக்கிரமிக்கப்பட்ட சாலை
எடப்பாடி அடுத்த ஆவனி பேருர் கீழ் முகம் கிராமம் மல்லிப்பாளைம் வார்டில் தெருக்களில் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் வாகனங்கள, பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட சாலையை அகற்ற வேண்டும்.
-ஊர்மக்கள், மல்லிப்பாளையம், எடப்பாடி.
===
பாழடைந்த கட்டிடங்கள்
தாரமங்கலம் அரசு பொது மருத்துவமனை பின்புறம் உள்ள பழைய குடியிருப்பு கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடங்கள் மர்ம நபர்களுக்கு வசிப்பிடமாகவும் மாறி விட்டது. இங்கு இரவில் மது அருந்திவிட்டு போதையில் அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்கிறார்கள். இதனால் மாணவ- மாணவிகள், பெண்கள் அச்சத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அந்த பகுதியில் மின் விளக்குகள் பொருத்தி கட்டிடங்களை இடித்து அச்சமில்லாத பகுதியாக மாற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.
-மு.லெனின் இந்தர், தாரமங்கலம், சேலம்.
===
காற்று மாசு
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்தில் உடல்களை அடக்கம் செய்ய வந்து செல்வோர் இறுதி சடங்கு செய்ய கொண்டுவரும் பொருட்களை மயானத்தில் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இவற்றை சிலர் தீ வைத்து எரிப்பதால் தர்மபுரி-சேலம் சாலையில் புகை மூட்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், தர்மபுரி.
===
Related Tags :
Next Story