மொழிப்பாடத்தை 31,671 மாணவ-மாணவிகள் எழுதினர்
மொழிப்பாடத்தை 31,671 மாணவ-மாணவிகள் எழுதினர்.
திருச்சி:
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 15,522 மாணவர்களும், 17,599 மாணவிகளும் என்று மொத்தம் 33,121 பேர் எழுதுகிறார்கள். இதற்காக 126 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மத்திய சிறை உள்பட தனித்தேர்வர்களுக்காக 4 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விடைத்தாள்களை திருத்த 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு நடைபெறும் மையங்களில் முறைகேடுகளை தடுப்பதற்கு 126 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களும், 126 நிலை கண்காணிப்பு படையும், 270 ஆசிரியர்களை கொண்ட 24 பறக்கும் படையும், 2,134 அறை கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொழிப்பாட தேர்வு தொடக்கம்
தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத்துக்கான முதல் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக காலை 8.30 மணிக்கே மாணவர்கள் பள்ளிக்கு வரத்தொடங்கினர். முன்னதாக பல மாணவ-மாணவிகள் கோவில், தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு சென்று தேர்வை நல்லமுறையில் எழுத வேண்டிக்கொண்டனர். சில பள்ளிகளில் தேர்வுக்கு முன் மாணவிகள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும் தேர்வு மையத்தில் மொத்தமாகவும், குழுவாகவும் அமர்ந்து மாணவ-மாணவிகள் கடைசி நேரம் வரை பாடங்களை படித்தனர். காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டது. அப்போது மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 9.55 மணிக்கு 2-வது மணி அடிக்கப்பட்டது. அப்போது தேர்வறை கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் உறையை பிரித்தனர்.
பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு
காலை 10 மணிக்கு 3-வது மணி அடித்ததும் அனைவருக்கும் வினாத்தாள் வழங்கப்பட்டது. பின்னர் காலை 10.10 மணிக்கு 4-வது மணி அடித்ததும் அனைவருக்கும் விடைத்தாள் வழங்கப்பட்டது. அதுவரை வினாத்தாளை வாசிக்க மாணவ-மாணவிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. காலை 10.15 மணிக்கு 5-வது மணி அடிக்கப்பட்டதும் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத தொடங்கினர்.
பிற்பகல் 1.10 மணிக்கு விடைத்தாளை நூலால் கட்ட எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. தொடர்ந்து 1.15 மணிக்கு இறுதி மணி அடித்ததும் தேர்வு நேரம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளிடம் இருந்து விடைத்தாள்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு அவை பாதுகாப்பாக விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
96 சதவீதம் பேர்
திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த மொழிப்பாடத்துக்கான தேர்வுக்கு 32,862 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதில் திருச்சி மத்திய சிறையில் உள்ள 3 கைதிகள் உள்பட 31,674 பேர் தேர்வு எழுதினர். அதாவது 96 சதவீதம் பேர் முதல் மொழிப்பாடத்துக்கான தேர்வை எழுதியுள்ளனர். திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த பிளஸ்-2 தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story