பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரம் வெட்டிக் கடத்தல்


பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரம் வெட்டிக் கடத்தல்
x
தினத்தந்தி 6 May 2022 4:57 AM IST (Updated: 6 May 2022 4:57 AM IST)
t-max-icont-min-icon

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரம் வெட்டிக் கடத்தப்பட்டது.

துவரங்குறிச்சி:
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை சேர்ந்தவர் அன்பு என்ற நேரு. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு தா.கவுண்டம்பட்டியில் உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நேரு தோட்டத்திற்கு வந்து செல்வது வழக்கம். தோட்டத்தின் ஒரு பகுதியில் சுமார் 25 ஆண்டுகள் பழமையான சுமார் 50 அடி உயரமுள்ள செம்மரம் ஒன்று இருந்தது. இந்த மரம் குறித்து வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினரிடம் நேரு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை நேரு வழக்கம்போல் தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது, செம்மரம் வெட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மேலும் சுமார் 35 அடி நீள மரத்தை மர்ம நபர்கள் கடத்திச்சென்றதும் தெரியவந்தது. மரத்தின் மேற்பகுதி அங்கு கிடந்தது. இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நேரு புகார் தெரிவித்தார். அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அந்த மரம் பல லட்ச ரூபாய் மதிப்புடையது என்று கூறப்படுகின்றது.மர்மநபர்கள் நோட்டமிட்டு மரத்தை வெட்டி கடத்திச் சென்றுள்ளனர் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. 
மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story