தூத்துக்குடி மாவட்டத்தில் 23,999 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. 106 மையங்களில் 23 ஆயிரத்து 999 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. 106 மையங்களில் 23 ஆயிரத்து 999 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. மாவட்டத்தில் 309 பள்ளிகளில் படித்து வரும் 11 ஆயிரத்து 968 மாணவர்கள், 12 ஆயிரத்து 31 மாணவிகள் ஆக மொத்தம் 23 ஆயிரத்து 999 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 114 மாற்றுத்திறனாளிகளும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 106 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கான வினாத்தாள் அனைத்தும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் கட்டு காப்பகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. நேற்று காலையில் வினாத்தாள் கட்டுகளை 22 வழித்தட அலுவலர்கள் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
பறக்கும் படை
நேற்று காலையில் மொழிப்பாடம் தேர்வு நடந்தது.. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். பொதுத் தேர்வை முன்னிட்டு மாணவ, மாணவிகள் காலையில் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டு இருந்தனர். அதே போன்று ஆசிரியர்களிடமும் ஆசி பெற்று தேர்வு எழுத சென்றனர்.
இந்த தேர்வை கண்காணிப்பதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 165 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 106 பேர் துறை அலுவலர்களாகவும், 106 ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், 1494 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
11-ம் வகுப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் 106 தேர்வு மையங்களில் 11-ம் வகுப்பு தேர்வு வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 204 பள்ளிகளில் படிக்கும் 9 ஆயிரத்து 863 மாணவர்கள், 11 ஆயிரத்து 158 மாணவிகள் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 21 பேர் எழுதுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
Related Tags :
Next Story