வெளிநாட்டு பொருட்கள் மீதான அடிமைத்தனத்தை குறைத்து கொள்ள வேண்டும்- பொதுமக்களுக்கு, பிரதமர் மோடி வேண்டுகோள்
வெளிநாட்டு பொருட்கள் மீதான அடிமைத்தனத்தை குறைத்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
புனே,
வெளிநாட்டு பொருட்கள் மீதான அடிமைத்தனத்தை குறைத்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
பிரதமர் மோடி இன்று புனேயில் ஜெயின் சர்வதேச வர்த்தக சங்கத்தின் ‘ஜிடோ கனெக்ட் 2022' தொழில் மாநாட்டை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அடிமைத்தனம்
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் நாம் வெளிநாட்டு பொருட்கள் மீதான அடிமைத்தனத்தை குறைத்து கொள்ள வேண்டும். உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளில் வியாபார சங்கத்தினர் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு தயாரிப்புகளை சார்ந்து இருப்பதை நாம் குறைக்க வேண்டும். ஏற்றுமதிக்கு புதிய இடத்தை கண்டறியுங்கள். உள்ளூர் சந்தையிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறைவில்லாமல் பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு பிரச்சினை ஏற்படுத்த கூடாது. இன்று நாடு முடிந்த வரை திறமை, வியாபாரம், தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வருகிறது. தற்போது நாட்டில் தினந்தோறும் டஜன் கணக்கில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. வாரந்தோறும் ஒரு பெருநிறுவனம் உருவாக்கப்படுகிறது.
தற்சார்பு இந்தியா
தற்சார்பு இந்தியா தான் நமது பாதை, முடிவாக உள்ளது. அரசின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடன் உள்ளது. இந்த சங்கத்தில் உள்ள இளம் உறுப்பினர்கள் இயற்கை விவசாயம், உணவு பதப்படுத்தல், வேளாண் தொழில்நுட்பம் போன்றவற்றில் முதலீடு செய்யவேண்டும். அரசின் முத்து விற்பனை இ-தளத்தில் சுமார் 40 லட்சம் விற்பனையாளர்கள் பதிவு செய்து உள்ளனர். அதை இந்த சங்க பிரதிநிதிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
தற்போது குக்கிராமம், சிறிய கடைக்காரர்கள், சுயஉதவி குழுவினர் தங்களது பொருட்களை நேரடியாக அரசிடம் விற்பனை செய்கின்றனர். உலகம் நம்பிக்கையுடன் இந்தியாவை பார்த்து கொண்டு இருக்கிறது. இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையும், நம்பிக்கையையும் கொடுக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியை உலகம் ஏற்றுக்கொண்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
---------------
Related Tags :
Next Story