எஸ்எஸ்எல்சிபொதுத்தேர்வை 33112 மாணவ மாணவிகள் எழுதினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 112 மாணவ மாணவிகள் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை எழுதினர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 112 மாணவ மாணவிகள் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை எழுதினர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, நிதியுதவி பெறும் பள்ளி என 504 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 318 மாணவர்களும், 16 ஆயிரத்து 75 மாணவிகளும் என 33 ஆயிரத்து 393 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அதேபோல் தனித் தேர்வர்கள் 1171 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த தேர்விற்காக பள்ளித் தேர்வர்களுக்கான 139 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கான 5 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வுக்கான அடிப்படை வசதிகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று காலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் தேர்வு மையத்தின் வளாகத்தில் அமர்ந்து கடைசி நிமிடம் வரை வீண் செய்யாமல் படித்தனர். இதனால் மாணவர்கள் மிகவும் பரபரப்பாக காணப்பட்டனர்.
1259 பேர் வரவில்லை
மாணவர்களை அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் வாழ்த்தினர். 9.45 மணியளவில் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தேர்விற்காக 144 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 144 துறை அலுவலர்களும், 144 எழுத்தர் மற்றும் 144 அலுவலக உதவியாளர்கள் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் தேர்வெழுதும் மாணவர்களை கண்காணிக்க 200 ஆசிரியர்கள் நிலையான பறக்கும் படையினராக செயல்பட்டனர்.
அத்துடன் தேர்வு எழுதும் 411 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளில் 340 பேருக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
முதல் நாளான இன்று பள்ளி மாணவர்கள் மற்றும் தனிதேர்வர்கள் என 34 ஆயிரத்து 371 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 33 ஆயிரத்து 112 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 1259 பேர் தேர்வு எழுத வரவில்லை.
Related Tags :
Next Story