கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கதவை மூட முயற்சித்த 41 பேர் கைது


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கதவை மூட முயற்சித்த 41 பேர் கைது
x
தினத்தந்தி 6 May 2022 7:26 PM IST (Updated: 6 May 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கதவை மூட முயற்சித்த 41 பேர் கைது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்க ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து இருந்தனர். இந்த நிலையில திடீரென்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மாவட்ட தலைவர் மேகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொட்டாஷ் உரம் மூட்டை ரூ.950-லிருந்து ரூ.1,700 ஆக உயர்த்தப்பட்டதை கண்டித்தும், விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வலியுறுத்தி, மின்தட்டுப்பாட்டை கண்டித்தும், விவசாய கடன் வழங்க வங்கி அதிகாரிகள் அலைகழிப்பதை கண்டித்தும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிட வளாகத்தின் பிரதான நுழைவு வாயிலில் அமர்ந்து திடீர் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை வேளையில் அலுவலகத்திற்கு பணிக்கு வந்தவர்கள், உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து உதவி கமிஷனர் அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் சேரன் ஆகியோர், உடனடியாக இந்த இடத்தை காலி செய்து செல்லுங்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு வழி விடுங்கள் என அறிவுறுத்தினர். அதற்கு அய்யாக்கண்ணு, கலெக்டர் எங்களை காத்திருக்க சொன்னார். அதனால், இங்கு காத்திருக்கிறோம். இது கலெக்டர் அலுவலகம் தானே. இங்கே இருக்கக்கூடாதா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளு முள்ளுவில் விவசாயி ஒருவரின் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் எவ்வித அனுமதியும் இன்றி, ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வாயிலை முற்றுகையிட்டு கதவை மூட முயற்சி செய்த காரணத்தால், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் 41 பேரை செசன்ஸ் கோர்ட்டு போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து மண்டபம் ஒன்றிற்கு கொண்டு சென்றனர். கைதானவர்களில் 7 பேர் பெண் விவசாயிகள் ஆவர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story