கோவை மாவட்டத்தில் அரசின் மானியத்துடன் புதிதாக 1,350 வீடுகள் கட்ட அரசாணை வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பரசன் தெரிவித்து உள்ளார்
கோவை மாவட்டத்தில் அரசின் மானியத்துடன் புதிதாக 1,350 வீடுகள் கட்ட அரசாணை வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பரசன் தெரிவித்து உள்ளார்
கோவை
கோவை மாவட்டத்தில் அரசின் மானியத்துடன் புதிதாக 1,350 வீடுகள் கட்ட அரசாணை வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் ஆய்வு
கோவை உக்கடம் டோபி காலனி உள்ளிட்ட இடங்களில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் சமீரன், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் இதுவரை 7 இடங்களில் ரூ.122 கோடியே 64 லட்சம் செலவில் 1,441 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
இதில் 1,248 பயனாளிகளுக்கு 1,173 வீடுகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 268 வீடுகள் தகுதி வாய்ந்த பயனாளிகளிடம் பங்கு தொகை வசூலிக்கப்பட்டு வருகிற 31-ந் தேதிக்குள் ஒப்படைக்கப்படும்.
மேலும் 16 இடங்களில் 608 வீடுகள் இந்த மாத இறுதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும்.
வங்கி கடனுதவி
மேலும் மாவட்டத்தில் 672 குடியிருப்புகள் கட்டும் பணி இந்த நிதியாண்டில் தொடங்கப்படும்.
இந்த திட்டத்தில் பங்கு தொகை செலுத்த முடியாதவர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பயனாளிகள் தாங்களாகவே வீடுகள் கட்டும் திட்டத்தில் நகர் புறங்களில் நிலம் வைத்துள்ள வீடற்ற ஏழைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் 400 சதுர அடியில் வீடு கட்டி கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்குகிறது.
தீர்வு காண வேண்டும்
இந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் இதுவரை 18,795 வீடுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு 15,369 வீடுகள் கட்டி முடிக்கப் பட்டு உள்ளன.
வருகிற 31-ந் தேதிக்குள் 2,105 வீடுகள் கட்டி முடிக்கப்படும். இதுதவிர புதிதாக 1,350 வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
குடிசை மாற்று வாரியத்தில் குடியிருக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கூறினர். உடனே அங்கிருந்த அதிகாரிகளிடம் தடையில்லா குடிநீர் மற்றும் தெருவிளக்கு, ரேஷன்கார்டு வழங்க அமைச்சர் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story