திண்டுக்கல் மாவட்டத்தில் 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர் 1,711 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை


திண்டுக்கல் மாவட்டத்தில் 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர் 1,711 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை
x
தினத்தந்தி 6 May 2022 8:40 PM IST (Updated: 6 May 2022 8:40 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். 1,711 பேர் தேர்வு எழுத வரவில்லை.

திண்டுக்கல்:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

தமிழகத்தில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இதையடுத்து இன்று எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. முதல்நாளான இன்று தமிழ் பாடத்துக்கு தேர்வு நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 353 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 13 ஆயிரத்து 432 மாணவர்கள், 12 ஆயிரத்து 508 மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 940 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்கே மாணவ-மாணவிகள் வந்தனர். மேலும் மாணவ-மாணவிகள் தங்களுடைய ஆசிரியர்களை சந்தித்து ஆலோசனை பெற்றனர். அப்போது ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியதோடு, நம்பிக்கையோடு தேர்வு எழுதும்படி அறிவுறுத்தினர்.
24 ஆயிரம் பேர் எழுதினர்
திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். இதையடுத்து காலை 9.45 மணிக்கு பலத்த சோதனைக்கு பின்னர் மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை தவிர மற்றவை அனுமதிக்கப்படவில்லை.
மேலும் ஒருசில பள்ளிகளில் காலை 9.30 மணி வரை சில மாணவர்கள் வரவில்லை. இதைத் தொடர்ந்து அந்த மாணவர்களை செல்போனில் ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு தைரியமூட்டி தேர்வு எழுத அழைத்தனர். மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் 12 ஆயிரத்து 357 மாணவர்கள், 11 ஆயிரத்து 872 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 229 பேர் தேர்வு எழுதினர். 1,075 மாணவர்கள், 636 மாணவிகள் என 1,711 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்த தேர்வில் ஆள்மாறாட்டம், காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க பறக்கும் படையினர், தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட நிலைக்குழுவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



Next Story