ஆற்று பாலத்தில் நின்ற ரெயிலை இயக்க உயிரை பணயம் வைத்த என்ஜின் டிரைவர்
பயணி அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ஆற்று பாலத்தில் நின்ற ரெயிலை மீண்டும் இயக்க உயிரை பணயம் வைத்த என்ஜின் டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
மும்பை,
பயணி அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ஆற்று பாலத்தில் நின்ற ரெயிலை மீண்டும் இயக்க உயிரை பணயம் வைத்த என்ஜின் டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
அபாய சங்கிலி
மும்பை எல்.டி.டி., குர்லா டெர்மினலில் இருந்து சப்ரா நோக்கி செல்லும் கோதான் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டு சென்றது. கல்யாணை அடுத்து டிட்வாலா-காதிவிலி ஆகிய ரெயில் நிலையங்களுக்கிடையே சென்ற போது பெட்டியில் இருந்த பயணி ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் ரெயில் உல்லாஸ் நதி பாலத்தில் சென்ற போது நடுவழியில் நின்றது. இதுபற்றி விசாரித்தபோது, அந்த நபர் அவசியம் இன்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது தெரியவந்தது.
ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றால், கடைசியில் இருந்து 2-வது பெட்டியின் பக்கவாட்டில் உள்ள லாக்கை எடுத்து விட வேண்டும்.
உயிரை பணயம் வைத்து...
ஆனால் ரெயில் ஆற்றுப்பாலத்தில் நின்றதால் கீழே இறங்கி சரி செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் என்ஜின் உதவி டிரைவர் சதீஷ்குமார் உயிரை பணயம் வைத்து பாலத்தில் இறங்கி ரெயிலுக்கு அடியில் ஊர்ந்து சென்று, லாக்கை சரி செய்தார்.
இதையடுத்து ரெயில் அதிக நேர தாமதமின்றி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதற்கிடையே உதவி என்ஜின் டிரைவர் லாக்கை சரிசெய்யும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதற்கு பயணிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பாராட்டு
இதுகுறித்து மத்திய ரெயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார், துணிச்சலுடன் செயல்பட்ட சதீஷ்குமாரை டுவிட்டரில் பாராட்டி உள்ளார். அதில், “சதீஷ்குமாரின் தைரியமான செயலால் ரெயில் அதிக தாமதமின்றி புறப்பட்டது. அந்த வழித்தடத்தில் வந்த மற்ற ரெயில் சேவைகளும் பாதிக்கவில்லை. இதனால் பயணிகளின் சிரமம் தவிர்க்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
மேலும் தேவையின்றி பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து, தண்டனையை அனுபவிக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story