துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.43½ லட்சம் தங்கம் சிக்கியது
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.43½ லட்சம் தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேரை கைது செய்துள்ளனர்.
மங்களூரு:
துபாயில் இருந்து...
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகள், வெளிமாவட்டங்களில் இருந்து மங்களூருவுக்கும் அதிகளவில் பயணிகள் வருகை தருகின்றனர். இதனை பயன்படுத்தி சிலர் விமானங்கள் மூலம் தங்கம், போதைப்பொருட்கள் போன்றவற்றை கடத்தி வரும் சம்பவம்
அடிக்கடி நடக்கிறது.
இந்த நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மங்களூரு விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த பயணியை அறைக்கு அழைத்து சென்று அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் (பசை) வடிவில் 732 கிராம் தங்கம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.37.69 லட்சம் ஆகும். இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
4 தங்க கட்டிகள்
இதேபோல் மற்றொரு விமானத்தில் வந்த பயணி ஒருவரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டனர். அதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.
உடனே அவர்கள் அந்த பயணியிடம் இருந்து அந்த தங்ககட்டிகளை பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் மங்களூரு விமான நிலையத்தில் ரூ.43½ லட்சம் தங்கம் சிக்கியது குறிப்பிடத்தக்கது. தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் பஜ்பே போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story