எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது குமரியில் 22981 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது குமரியில் 22981 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 6 May 2022 8:51 PM IST (Updated: 6 May 2022 8:51 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. குமரி மாவட்டத்தில் தமிழ் தேர்வை 22981 பேர் எழுதினர்.

நாகர்கோவில்:
எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. குமரி மாவட்டத்தில் தமிழ் தேர்வை 22,981 பேர் எழுதினர். 
4 கல்வி மாவட்டங்கள்
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. நேற்று எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை எழுத குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய 4 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 11,560 மாணவர்களும், 11,699 மாணவிகளுமாக மொத்தம் 23,259 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக 119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்று தமிழ் மற்றும் மலையாள மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது. தமிழ் தேர்வுக்கு 23,259 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் 22,961 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். 298 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதிய மாணவர்களில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் 120 பேரும் அடங்குவர். அவர்களும் நேற்று தமிழ் மொழிப்பாடத் தேர்வை எழுதினார்கள். அவர்களுக்கு சொல்வதைக் கேட்டு எழுதும் ஆசிரிய- ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதேபோல் மலையாள மொழி பாடத் தேர்வுக்கு 26 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 20 பேர் தேர்வு எழுதினர். 6 பேர் தேர்வு எழுத வரவில்லை. குமரியில் நேற்று மொத்தம் 22,981 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.
ஆசி- வாழ்த்து
முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவ- மாணவிகளில் பலர், தேர்வு நடைமுறைகள் எப்படி இருக்குமோ? தேர்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறோமோ? என்ற மனநிலையோடு, மனக்கலக்கத்தில் தங்களது பெற்றோருடன் தேர்வு மையங்களுக்கு வந்ததை காண முடிந்தது. பல மாணவ- மாணவிகள் இந்த தேர்வு மூலம் 10-ம் வகுப்பை நிறைவு செய்துவிட்டு, மேல்நிலைக் கல்விக்கு செல்லப்போகிறோம் என்ற எதிர்பார்ப்போடும், மகிழ்ச்சியோடும் தேர்வு மையங்களுக்கு வந்ததை காண முடிந்தது.
நாகர்கோவில் நகரில் உள்ள பல பள்ளிகளில் தேர்வு அறைகளுக்கு செல்வதற்கு முன்பு மாணவ- மாணவிகளை அவர்களுடைய ஆசிரிய- ஆசிரியைகளும், பெற்றோரும் ஆசி வழங்கி வாழ்த்தியும், பிரார்த்தனை செய்தும் அனுப்பி வைத்ததை காண முடிந்தது. சில மாணவ- மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலைத் தொட்டு வணங்கி தேர்வு எழுதச் சென்ற காட்சிகளும் அரங்கேறின.
ஹால்டிக்கெட்டை மறந்த மாணவி
தேர்வு அறைக்குச் செல்லும்போது மாணவ- மாணவிகள் அணிந்து வந்திருந்த செருப்பு மற்றும் ஷூக்கள் தேர்வறைக்கு வெளியே கழற்றி வைத்துவிட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அதேபோல் புத்தகப் பைகளும், எலக்ட்ரானிக் பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளிக்கு தேர்வு எழுத வந்த ஒரு மாணவி  தனது ஹால்டிக்கெட்டை மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டார். அவர் பள்ளிக்கு வந்தபிறகுதான் ஹால்டிக்கெட்டை எடுத்து வராதது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கு தகவல் கொடுத்து உடனடியாக ஹால்டிக்கெட்டை எடுத்து வரச்செய்து, தேர்வு எழுத அனுமதித்தனர். இதனால் அந்த மாணவி சிறிது பதற்றத்துடன் காணப்பட்டார்.
---

Next Story