பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 5,369 பேர் எழுதினர்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 5,369 பேர் எழுதினர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 5,369 பேர் எழுதினர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 99 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 2,938 பேரும், மாணவிகள் 2,907 பேரும் சேர்த்து மொத்தம் 5,845 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் மாணவர்கள் 2,613 பேரும், மாணவிகள் 2,756 பேரும் சேர்த்து மொத்தம் 5,369 தேர்வு எழுதினார்கள். மாணவர்கள் 325 பேரும், மாணவிகள் 151 பேரும் சேர்த்து மொத்தம் 476 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாற்றுத்திறனாளிகள் 26 பேர் தேர்வு எழுதினார்கள். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறையில் 34 தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள் 34 பேரும், அறை கண்காணிப்பாளர்கள் 392 பேரும், 36 பறக்கும் படையினரும், 13 நிலையான பறக்கும் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டனர்.
கல்வி அதிகாரி ஆய்வு
பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து வழித்தட அலுவலர்கள் தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்களை கொண்டு சென்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் ராஜசேகரன் தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் மாணவ- மாணவிகளிடம் தேர்வு மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதை தவிர பறக்கும் படையினரும் அவ்வப்போது தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். தமிழ் தேர்வு எழுதி விட்டு, தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறுகையில், கொரோனா காரணமாக பள்ளிகள் சரிவர செயல்படவில்லை. இதனால் பொதுத்தேர்வு எப்படி எழுத போகிறோம் என்று குழப்பமாக இருந்தது. இருப்பினும் நிச்சயம் தேர்வு எளிதாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் சென்றேன். இதற்கிடையில் 10-ம் வகுப்பு தேர்வு மிகவும் முக்கியமானது என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு படித்து வந்தேன். தமிழ் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது என்றனர்.
வால்பாறை
வால்பாறை பகுதியில் உள்ள மூன்று தனியார் பள்ளிகள் உட்பட 10 அரசு பள்ளிகளை சேர்ந்த 535 மாணவ -மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதினார்கள். வால்பாறை பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை 7 மையங்களில் எழுதினார்கள். 29 பேர் தேர்வு எழுதவரவில்லை. 3 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளும் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினார்கள். அந்தந்த பள்ளி நிர்வாகம் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்திருந்தது.
Related Tags :
Next Story