பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை; ராஜஸ்தான் அதிகாரி மீது வழக்கு


பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை; ராஜஸ்தான் அதிகாரி மீது வழக்கு
x
தினத்தந்தி 6 May 2022 10:03 PM IST (Updated: 6 May 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

கேலோ விளையாட்டு போட்டியின் போது பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜஸ்தான் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

பெங்களூரு: பெங்களூருவில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றிருந்தது. இந்த விளையாட்டு போட்டிகள், பெங்களூரு அருகே கனகபுரா தாலுகா ஆரோஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற்றிருந்தது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கபடி குழுவில், தகவல் தொழில்நுட்ப பிரிவில் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அந்த பெண் தங்குவதற்காக கல்லூரியில் ஒரு அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த அறைக்கு ராஜஸ்தான் மாநில கபடி குழுவில் இடம் பெற்றிருந்த அதிகாரியான கியாபா சங்கர் சென்றதாக தெரிகிறது. பெண் அதிகாரியிடம் பேசிக் கொண்டு இருந்த போது, அவருக்கு கியாபா சங்கர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி ஆரோஹள்ளி போலீஸ் நிலையத்தில் பெண் அதிகாரி புகார் அளித்தார். 

அதன்பேரில், கியாபா சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் அதிகாரிக்கு கியாப சங்கர் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி ராஜஸ்தான் கபடி விளையாட்டு சங்கத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கியாபா சங்கரை கபடி குழுவில் இருந்து நீக்கி இருப்பதாகவும், அவரிடம் ராஜஸ்தான் மாநில கபடி சங்கம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story