ஆர்வமுடன் தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள்
தர்மபுரி மாவட்டத்தில் 100 மையங்களில் வழக்கமான உற்சாகத்துடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
தர்மபுரி:-
தர்மபுரி மாவட்டத்தில் 100 மையங்களில் வழக்கமான உற்சாகத்துடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
10-ம் வகுப்பு தேர்வு
தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு திட்டமிட்டபடி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் வழக்கமான உற்சாகத்துடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
மாவட்ட முழுவதும் உள்ள 332 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 895 மாணவர்களும், 11 ஆயிரத்து 33 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 928 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 100 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று தமிழ் பாட தேர்வை 22 ஆயிரத்து 183 பேர் ஆர்வத்துடன் எழுதினர்.
பறக்கும் படை
தேர்வையொட்டி மொத்தம் 100 தேர்வு மைய கண்காணிப்பாளர்களும், 1,623 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 22 வழித்தட அலுவலர்களும், 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ- மாணவிகள் தேர்வு எழுத உதவியாக 155 பேரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். மாணவ-மாணவிகள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 102 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கலெக்டர் திடீர் ஆய்வு
இந்த நிலையில் கலெக்டர் திவ்யதர்சினி காரிமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டரிந்தார்.
இதேபோன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகவேல் (தர்மபுரி), பாலசுப்பிரமணியம் (பாலக்கோடு), ரவி (அரூர்) ஆகியோரும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story