வேடசந்தூர் அருகே 4 கார்களில் கடத்தி வந்த ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல் 6 பேர் கைது
வேடசந்தூர் அருகே 4 கார்களில் கடத்தி வந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேடசந்தூர்:
வாகன தணிக்கை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கார்களில் வேடசந்தூர் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, சேக்தாவூத், மாரிமுத்து, தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு குமாரசாமி உள்ளிட்ட தனிப்படை போலீசார் வேடசந்தூர் அருகே கரூர் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கல்வார்பட்டி சோதனைச்சாவடியில் இன்று அதிகாலை 3 மணி முதல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
புகையிலை பொருட்கள்
அப்போது திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்த காரை போலீசார் சோதனைச்சாவடியில் நிறுத்தி கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
இதனையடுத்து போலீசார் சந்தேகமடைந்து காரை சோதனை செய்தனர். அப்போது காருக்குள் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா என்னும் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 3 கார்கள் வந்தன. அந்த கார்களையும் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த கார்களிலும் மூட்டை, மூட்டையாக குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு 4 கார்களிலும் மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 910 கிலோ குட்கா இருந்தது. இதையடுத்து குட்காவையும், 4 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
6 பேர் கைது
மேலும் காரில் வந்த டிரைவர்கள் உள்பட 6 பேரையும் போலீசார் கூம்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் சேலம் மாவட்டம் வெள்ளப்பன்பட்டியை சேர்ந்த இளையபாரதி (வயது 24), உப்பார்பட்டியை சேர்ந்த ஜீவா (23), கேரள மாநிலம் கூத்தலையை சேர்ந்த சரத்மோகன் (28), வெல்லரதாவை சேர்ந்த ரத்தீஷ் (34), உடும்பன்சோலை பாலகிராமத்தை சேர்ந்த அஜித்முரளி (34), வெள்ளையன்கோட்டை பொன்பாறையைச் சேர்ந்த விஷ்ணு (31) என்பதும், இவர்கள் பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மதுரை, நாகர்கோவில் மற்றும் கேரளாவிற்கு குட்காவை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.
இந்த கடத்தலில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
(பாக்ஸ்)காரில் வக்கீல் ஸ்டிக்கர்
பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்த 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் முதலாவதாக வந்த காரில் வக்கீல் கார் என்பது போல வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தால் போலீசார் சோதனை நடத்த மாட்டார்கள் என்று நம்பியதாக கடத்தல்காரர்கள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்டதில் 2 கார்களில் கேரள பதிவெண்ணும், 2 கார்களில் தமிழக பதிவெண்ணும் இருந்தது.
Related Tags :
Next Story