தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
புதிய மின்கம்பம் நடப்பட்டது
கருங்கல் பேரூராட்சி 13-வது வார்டு பாலவிளை பத்ரேஸ்வரி அம்மன் ஆலயம் அருகில் மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதுபற்றிய செய்தியும், படமும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன் பேரில் புதிய மின்கம்பம் நடப்பட்டு உள்ளது. இதுபற்றி செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சேதமடைந்த மின்கம்பம்
குளச்சல் நகராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு பி.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்கிறார்கள். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகம்மது சபீர், குளச்சல்.
திறக்கப்படுமா?
திருவட்டார் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளது. இந்த அறை கொரோனா ஊரடங்குக்கு முன்பு வரை தாய்மார்கள் பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் அறை பூட்டியே கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்ட முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவுரி நந்தினி, திருவட்டார்.
மின் விளக்குகள் எரியவில்லை
குலசேகரம் பேரூராட்சி தட்டான்விளை பகுதியில் உள்ள தெருவிளக்குகள் கடந்த 10 நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரத்தில் வாகனத்தில் செல்பவர்களும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே மின் விளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஜித்குமார், தட்டான் விளை.
சீரமைக்க வேண்டிய சாலை
ராஜாக்கமங்கலம் கிராம அலுவலக சாலையில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளங்கள் சரி வர மூடாமல் விட்டு விட்டனர். இதனால் இந்த சாலையில் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.நாகராஜன்,
ராஜாக்கமங்கலம்.
மீண்டும் பஸ் இயக்க வேண்டும்
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, சுசீந்திரம், பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி ஆகியவற்றை இணைத்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் காலை முதல் மாலை வரை ஒரு நாள் சுற்றுலா டிரிப் என்ற வகையில் பஸ் முன்பு இயக்கப்பட்டு வந்தது. தற்போது குமரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா தலங்களை இணைக்கும் பஸ் மீண்டும் இயக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- அசோக்குமார், திருவட்டார்.
Related Tags :
Next Story