கொப்பரை தேங்காய் விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம்
கொப்பரை தேங்காய் விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம்
போடிப்பட்டி:
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்பட்டு வரும் கொள்முதல் மையத்தில் கொப்பரைகளை விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால் இதுவரை ரூ. 4 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது.
எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள்
உடுமலை பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் உள்ள நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விவசாயிகளே கொப்பரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள்.கொப்பரைகளை பெரும்பாலும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலை இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ கொப்பரை ரூ. 95- க்கும் குறைவாகவே விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் விதமாக கொப்பரைக்கு மத்திய அரசின் நேபெட் மூலம் ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டது.அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் முதல் அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ. 105.90-க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
400 டன் கொள்முதல்
வெளிச்சந்தையை விட அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுகுறித்து உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சரவணன் கூறியதாவது:-
பொதுவாக அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை கொள்முதல் செய்யத் தொடங்கியதும் வெளி சந்தையில் கொப்பரை விலை உயர்ந்து விடும்.ஆனால் நடப்பு ஆண்டில் கொள்முதல் தொடங்கி 3 மாதங்கள் ஆன நிலையிலும் வெளிச்சந்தையில் கொப்பரை விலை உயரவில்லை.இதனால் அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.விவசாயிகள் நலன் கருதி வரும் ஜூலை மாதம் 31 -ந் தேதி வரை கொள்முதல் மையங்கள் செயல்படும்.விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் கொப்பரைகளில் ஈரப்பதம், பூஞ்சை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு தரமான கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.அதற்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.தற்போது வரை உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்படும் கொப்பரை கொள்முதல் மையத்தில் 400 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 4 கோடியே 23 லட்சத்து 60 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story