டிப்பர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி


டிப்பர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 6 May 2022 10:51 PM IST (Updated: 6 May 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர்.

ஆண்டிப்பட்டி: 

தேனி மாவட்டம் மேகமலை அருகே மகாராஜா மெட்டை சேர்ந்த காணிக்கை மகன் டேனிஷ் என்ற ஜெயன் (வயது 21). வெண்ணியார் எஸ்டேட்டை சேர்ந்த முத்தையா மகன் விஜயகுமார் (27). மேல் மணலாற்றை சேர்ந்த சுரேந்திரன் மகன் சுமன் (24). இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தேனியில் இருந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை டேனிஷ் ஓட்டினார்.  தேனி-மதுரை சாலையில் க.விலக்கு அருகே அன்னை இந்திரா நகர் பிரிவில் எதிரே வந்த டிப்பர் லாரி சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. 

 இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் டேனிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த க.விலக்கு போலீசார் காயமடைந்த விஜயகுமார், சுமன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.  அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் நேற்று இரவு உயிரிழந்தார். சுமனை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருமலாபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரஞ்சித் மீது க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

டேனிஷ், விஜயகுமார் உடல்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மேகமலைக்கு கொண்டு சென்றனர். மலைப்பாதையில் மேகமலை அருகே ஆம்புலன்ஸ் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் ஆம்புலன்சின் முன்பகுதி சேதமடைந்தது. இதனால் 2 மணி நேரம் உடல்களை ஆம்புலன்சில் வைத்திருந்தனர். பின்னர் தேனியில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடல்களை மாற்றி ஊருக்கு கொண்டு சென்றனர்.

Next Story