கேரளாவில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்


கேரளாவில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்  தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 May 2022 11:00 PM IST (Updated: 6 May 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதையடுத்து தமிழக பஸ்கள் குமரி எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது.

களியக்காவிளை, 
கேரளாவில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதையடுத்து தமிழக பஸ்கள் குமரி எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது.
வேலை நிறுத்தம்
கேரளாவில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க தாமதம் ஏற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏப்ரல் மாத ஊதியத்தை 5-ந் தேதிக்கு முன் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஐ.என்.டி.யு.சி., பி.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி. போன்ற எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தது. 
இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜூ பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஏப்ரல் மாத ஊதியம் 10-ந் தேதிக்குள் வழங்கலாம் எனவும், அடுத்த மாதம் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். 
ஆனால் இதை ஏற்க மறுத்து ஐ.என்.டி.யு.சி., பி.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. அதே நேரத்தில் சி.ஐ.டி.யு.வை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. இதனால், நேற்று கேரளாவில் பெரும்பாலான பஸ்கள் இயங்க வில்லை. குறைவான அளவு பஸ்களே இயங்கியதால் அவற்றில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. 
தமிழக பஸ்கள்
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தினமும் ஏராளமான தமிழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று வேலை நிறுத்தம் காரணமாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்ட தமிழக பஸ்கள் குமரி-கேரள எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது. இதனால் கேரளாவுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். 
வேலை நிறுத்தம் காரணமாக பாறசாலை உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் கேரள பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தது. 

Next Story