கிடப்பில் ரெயில்வே மேம்பால பணிகள்
ராமநாதபுரத்தில் ரூ.25 கோடியில் நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் ரூ.25 கோடியில் நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
போக்குவரத்து நெருக்கடி
ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரெயில் நிலையம் அருகில் ரெயில்வேகேட் அமைந்து உள்ளது. நகரின் முக்கிய பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் வரும் சமயங்களில் கேட் மூடப்படுவதால் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் மக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனை போக்கும் வகையில் இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் பொதுமக்களின் சிரமத்தை போக்கிடும் விதமாக மேற்கண்ட ரெயில்வே கேட் பகுதியில் புதிய சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
நிதி ஒதுக்கீடு
அதன்படி, நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரெயில்வே சாலை மேம்பாலம் அமைக்க நில ஆர்ஜிதத்திற்கு ரூ.5.14 கோடி மதிப்பிலும், கட்டுமானப் பணிகளுக்கு தொழில்நுட்ப அங்கீகாரமாக ரூ.25.60 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.30.74 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மேம்பாலமானது, மொத்தம் 675.56 மீட்டர் நீளத்திலும், 11 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட உள்ளது. அதேபோல, பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம் அமைக்கப்பட உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட இந்த பால பணிகள் 2 ஆண்டு காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது.
அறிவிப்பு
மேம்பால பணி ஆமை வேகத்தில் நடந்து வந்த நிலையில் ரெயில்வே கேட்டின் இருபுறமும் தூண்கள் அமைக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டு உள்ளது. ரெயில்வே நிலையத்திற்கு முன்னதாக சாலையில் பணி தொடர்ந்து நடைபெறாமல் நின்று விட்டது. இதேபோல சேதுநகர் பகுதியிலும் பாதியிலேயே பணிகள் முடிவடையாமல் நின்றுவிட்டது. இதுதவிர, ரெயில்வே தண்டவாள பகுதியில் மேம்பால பணி ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பாலம் அமைப்பதற்காக சரக்கு ரெயில்களில் ராட்சத இரும்பு கர்டர்கள் வந்து இறங்கி பல மாதங்களாகியும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் உள்ளதாகவும் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் நில உரிமையாளர்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல் படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரெயில்வே நிர்வாகத்தினர் பாலம் அமைத்துவிட்டால் தங்களின் பணி முடிவடைந்துவிடும் என்று தெரிவித்தாலும் அதற்கான எந்தவொரு செயல்பாடும் மேற்கொள்ளப்பட வில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது.
வேதனை
எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேம்பால பணிகளை முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அனைத்து தரப் பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story