சின்னசேலம் அருகே சாலை விபத்தில் காய்கறி வியாபாரி பலி


சின்னசேலம் அருகே சாலை விபத்தில் காய்கறி வியாபாரி பலி
x
தினத்தந்தி 6 May 2022 11:05 PM IST (Updated: 6 May 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே நடந்த சாலை விபத்தில் காய்கறி வியாபாரி பலியானார்.

சின்னசேலம், 
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி அப்துல் கலாம் சாலை பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் மணிகண்டன் (வயது 31), காய்கறி வியாபாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி அடுத்த நரிமேடு காரனூர் கிராமத்தில் தங்கி, ஆட்டோவில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வந்தார். 
இந்தநிலையில் வியாபாரத்துக்கு மொத்தமாக காய்கறி வாங்குவதற்காக மணிகண்டன் தனது ஆட்டோவில் சேலம் மாவட்டம் தலைவாசல் வாரச்சந்தைக்கு நேற்று அதிகாலை புறப்பட்டார். சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னசேலம் அடுத்த அம்மையகரம் ரெயில்வே கேட் மேம்பாலத்தில் இறங்கியபோது, பின்னால் வந்த கார் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story