கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் காரை வழிமறித்து தாக்குதல்
கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் காரை ஒரு கும்பல் வழிமறித்து தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
கடலூர் முதுநகர்,
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பூவானிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக அருள்ஜோதி உள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளராக இருக்கிறார். இவரது மனைவி சுஜாதா, தனது குழந்தைகளுடன் நேற்று மதியம் கடலூருக்கு காரில் வந்தார்.
பின்னர் மாலை 6 மணி அளவில் கடலூரில் இருந்து பூவானிக்குப்பத்திற்கு அதே காரில் சுஜாதா புறப்பட்டார். இவர்களது கார், கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் கடலூரில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெய்வேலி பகுதியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமான வாகனங்களில் கடலூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
காரை மறித்து தாக்குதல்
அப்போது காரில் வந்த ஒரு கும்பல் திடீரென, வி.சி.க. பிரமுகர் அருள்ஜோதியின் மனைவி சுஜாதா வந்த காரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் கண்இமைக்கும் நேரத்தில் காரின் பின்பக்க கண்ணாடியையும், முன்பக்க கண்ணாடியையும் அடித்து நொறுக்கியது. மேலும் உருட்டுக்கட்டையால் அடித்து காரை சேதப்படுத்தியதோடு, முன்னால் கட்டி இருந்த வி.சி.க. கொடியையும் கிழித்து எரிந்தது. இதை சற்றும் எதிர்பாராத சுஜாதாவும், அவரது குழந்தைகளும் கூச்சலிட்டனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விரைந்து சென்று, நடந்த சம்பவம் குறித்து சுஜாதாவிடம் விசாரித்தனர்.
சாலை மறியல்
இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறுகையில், எங்கள் கட்சி பிரமுகரின் கார் கண்ணாடியை பா.ம.க.வினர்தான் அடித்து உடைத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். அதற்கு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பதற்றம்; போலீஸ் குவிப்பு
இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் இரவில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் காரை வழிமறித்து தாக்கியது யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story