அடுத்த தலைமுறையை காப்பாற்ற பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும்


அடுத்த தலைமுறையை காப்பாற்ற பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும்
x
தினத்தந்தி 6 May 2022 11:31 PM IST (Updated: 6 May 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்கள் மதுகுடிப்பது வேதனை அளிப்பதாகவும், அடுத்த தலைமுறையை காப்பாற்ற பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் சிதம்பரத்தில் நடந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

சிதம்பரம், 

கடலூர் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வ.மகேஷ் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி வரவேற்றார். 
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் அடுத்தது பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் நீங்கள் களத்தில் இறங்கி வேகமாக பணியாற்றினால் 2026-ம் ஆண்டில் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும். அதற்கு முன்னோட்டமாக இந்த பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. அடுத்த ஒரு மாதத்தில் அனைத்து கிராமங்களிலும் நம்முடைய கட்சி கொடியை பறக்கவிட வேண்டும். 

மக்கள் வாழ்வில் முன்னேற்றமில்லை 

கடந்த 55 ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. ஆனால் மக்கள் வாழ்வில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் நம்மை தேர்ந்தெடுப்பார்கள். 2026-ம் ஆண்டில் எந்த கட்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி, ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தாலும் சரி, அது மக்களிடம் எடுபடாது. மக்கள் பா.ம.க.வுக்கு ஓட்டு போட போகிறார்கள்.
தற்போது தமிழகத்தில் ஆண்களை போல் பெண்களும் மது குடிக்க ஆரம்பித்து விட்டார்கள், அதிலும் பள்ளி மாணவ-மாணவிகள் மது குடிப்பது வேதனை அளிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறையை நாம் பார்க்க முடியாது. 
நம் கண்முன்னே தலைமுறை அழிந்து வருகிறது. அடுத்த தலைமுறையை காப்பாற்ற பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும். 

மதுக்கடையை மூடவில்லை 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு கொள்கை ரீதியில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் ஒரு மதுக்கடையை கூட மூடவில்லை. 
பா.ம.க. மட்டும் இல்லையென்றால் கடலூர் மாவட்டம் கெமிக்கல் மண்டலமாக மாறி இருக்கும். 47 கிராமங்களை அழித்து இருப்பார்கள். பா.ம.க. மிகப்பெரிய போராட்டம் செய்த பிறகுதான் அரசு, அந்த திட்டத்தை கைவிட்டது.
கடல் நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். தற்போது பா.ம.க. 2.0 தொடங்க உள்ளது. 

என்.எல்.சி.யால் பிரச்சினை 

நெய்வேலி என்.எல்.சி. என்றாலே பிரச்சினைதான். நாங்கள் அதை வளர்ச்சி திட்டமாக பார்க்கவில்லை. பிரச்சினையாகத்தான் பார்க்கிறோம். கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 8 அடியில் இருந்தது. என்.எல்.சி. வந்த பிறகு நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கு கீழே சென்று விட்டது. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை இல்லாதது. எனவே நீட் தேர்வை தடை செய்ய வேண்டும்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 13 ஆண்டுகளாக வேலை செய்த தொகுப்பூதிய ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும். அவர்கள் பல்வேறு போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதேபோல் கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். 

Next Story