வழுக்கை தலையை மறைத்து பெண்ணை திருமணம் செய்த வாலிபர்
தேனி அருகே வழுக்கை தலையை மறைத்து வாலிபர் பெண்ணை திருமணம் செய்தார். இந்த குட்டு வெளிப்பட்டதால் வாலிபர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி:
ஏமாற்றி திருமணம்
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும், மதுரை திருநகர் பகுதியை சேர்ந்த 33 வயது வாலிபருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. பெண் பார்க்கும் படலம் முடிந்து இருவீட்டார் ஏற்பாட்டில் இந்த திருமணம் நடந்தது. திருமணத்தின்போது அந்த பெண்ணின் பெற்றோர் 20 பவுன் நகைகளும், ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் கொடுத்தனர்.
திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய கணவருக்கு தலை வழுக்கையாக இருப்பதும், வழுக்கை தலையை விக் வைத்து மறைத்து திருமணம் செய்ததும் தெரியவந்தது. மேலும் அவருடைய கணவருக்கு ஏற்கனவே இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
வழக்குப்பதிவு
இதற்கிடையில் குட்டு வெளிப்பட்டதால் ஆத்திரமடைந்த கணவரும், அவருடைய குடும்பத்தினரும் அந்த பெண்ணை சித்ரவதை செய்ததுடன், மேலும் 50 பவுன் நகைகளும், ரூ.10 லட்சமும் பெற்றோர் வீட்டில் வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தினர். இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் அங்கு வந்து நியாயம் கேட்டனர். அதற்கு அவர்கள், உண்மையை கூறினால் பெண் கொடுக்க மாட்டீர்கள் என்பதால் சொல்லாமல் மறைத்தோம் என்று கூறியதோடு, அந்த பெண்ணையும் வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
மேலும், திருமணத்தின் போது போட்ட நகைகளையும் திருப்பிக் கொடுக்காமல் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் கொடுத்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த பெண்ணின் கணவர் உள்பட 6 பேர் மீது தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story