கடலூர் கலெக்டர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை


கடலூர் கலெக்டர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 6 May 2022 11:34 PM IST (Updated: 6 May 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து, மனைப்பட்டா வழங்க வேண்டும்.தண்ணீர் தேங்காத, எதிர்காலத்தில் தண்ணீர் வர வாய்ப்பில்லாத, கரம்பாக உள்ள நீர்நிலை புறம்போக்குகளில் வசிக்கிற மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.

நத்தம் புறம்போக்கு, தரிசு நிலம் புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு காலதாமதமின்றி பட்டா வழங்க வேண் டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப் படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

பேரணி

அதன்படி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் சிவானந்தம் முன்னிலையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கடலூர் ஆல்பேட்டையில் ஒன்று திரண்டனர்.
தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து பேரணியாக குண்டு சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந் தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக வாசலில் இருந்து அவரது அறைக்கு செல்ல முயன் றனர். இதை பார்த்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் புதுநகர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

முற்றுகை

அப்போது நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதையடுத்து நடத்திய பேச்சுவார்த்தையில், முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் கலெக்டரின் காரை சுற்றியிலும் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதையடுத்து மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

166 பேர் மீது வழக்கு

அந்த மனுவில், கோவில், தேவாலயம், மசூதி நிலங்களில் குடியிருக்கும் இடத்தின் வாடகை உயர்வை திரும்ப பெற வேண்டும். கடலூரை குடிசையில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட 110 பெண்கள் உள்பட 166 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story