கண்மாயில் பழங்கால இரும்பு உருக்காலை எச்சம் கண்டெடுப்பு
கண்மாயில் பழங்கால இரும்பு உருக்காலை எச்சம் கண்டெடுப்பு
மானாமதுரை
மானாமதுரையை அடுத்த உருளி கிராமத்தின் அருகே உள்ள குடஞ்சாடி கண்மாய் பகுதியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு செய்து அப்பகுதியில் பழங்கால இரும்பு உருக்காலை இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் அக்கண்மாய் பகுதியில் ஏராளமான இரும்பு உருக்கு கழிவுகள் கருமை நிறத்தில் பெரும் குவியலாகவும், பல துண்டு குழாய்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கூறியதாவது- இந்த கண்மாய் பகுதியில் இரும்பை உருக்கும் உலைகளில் பயன்படுத்தப்படும் கெண்டியின் பாகங்கள் அதிகளவில் சிதைந்து காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் ஏராளமான உருளை வடிவ கம்பியும், பெரிய அளவிலான இரும்பு துண்டுகளும் பரவி காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் ஏராளமான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய முன்னோர்கள் பயன்படுத்திய பானை ஓடுகளும் காணப்படுகிறது. மேலும் உருக்கு கழிவுகள் அந்த இடத்தில்பரவி கிடக்கிறது. இந்த பகுதியில் இரும்பிற்கான மூலப்பொருள் இருப்பதையும், அதை எடுத்து உருக்கினால் இரும்பு பொருட்கள் செய்யலாம் என்ற வித்தையை அக்காலமக்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. பழங்காலத்தில் இங்கே வாழ்ந்த மக்கள் கத்தி, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்கூடமாகவும் இப்பகுதியை பயன்படுத்தியிருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story