கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாமரைக் குளம்
அரியலூர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரில் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இதனால் சாதாரண மக்கள் வாழ்வதற்கு மாற்று இடமில்லாமல் வீடுகளை இழந்து அகதிகளாக மரத்தடியில் சமைத்து வாழும் சூழ்நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக ராஜீவ்காந்தி நகரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் வாலண்டினா கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்குபின் மனு அளிக்க வந்தபோது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரான பூங்கோதையிடம் மனு அளிக்குமாறு அதிகாரிகள் கூறினர். மாவட்ட கலெக்டரிடம் நேரில் மட்டுமே கொடுக்க முடியும் என மாநில மாதர் சங்க தலைவரும், மாநில குழு உறுப்பினருமான வாலண்டினா கூறியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை மாவட்ட கலெக்டர் பெறுவதை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் தனது அறையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக்கூடாது வெளியேறுங்கள் என கூறினார். புகைப்படம் வேண்டுமென்றால் மனு கொடுப்பவர்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story