முதலிடம் பிடித்த தோடர் பெண்கள்
முதலிடம் பிடித்த தோடர் பெண்கள்
ஊட்டி
தேசிய பழங்குடியினர் கைவினை பொருட்கள் விற்பனை திருவிழாவில் முதலிடம் பிடித்த ஊட்டி பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது. அதை, ஊட்டி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் கலெக்டர் அம்ரித்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் கலெக்டர் கூறியதாவது:- ஒடிசாவில் நடைபெற்ற திருவிழாவில் ஊட்டி பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் பங்கேற்க ஜான்சிராணி, ரேணுகா, பிரித்திகா ஆகிய 3 தோடர் இனத்தை சார்ந்த பெண்கள் விற்பனை முகவர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். திருவிழாவில் 62 பழங்குடியினரின் கைவினை பொருட்களும், 200 விற்பனை அங்காடிகளும் அமைக்கப்பட்டது. அதில் 1 அங்காடி தமிழக பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது.
இங்கு தோடர் இன மக்களால் வெள்ளை நிற பருத்தி துணியில் கருப்பு மற்றும் சிவப்பு நிற கம்பளி நூல்களை கொண்டு கைகளால் நெய்யப்படும் பூத்தையலுக்கு முதலிடம் கிடைத்தது. அதற்கு பரிசுத்தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இது நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி சுகந்தி பரிமளம், பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குனர் உதயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story