கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்
நீலகிரியில் கோடை விழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு பிரமாண்ட சிற்பங்கள் அமைக்கப்படுகிறது.
கோத்தகிரி
நீலகிரியில் கோடை விழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு பிரமாண்ட சிற்பங்கள் அமைக்கப்படுகிறது.
கோடை விழா
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோடை விழா நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால், கோடை விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது.
இதையொட்டி வருகிற 31-ந் தேதி வரை ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலைத்துறை அரங்கத்தில் நீலகிரி மாவட்ட வனத்துறை மூலம் புகைப்பட கண்காட்சி நடக்கிறது. இதில் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழில், வனவிலங்குகள் மற்றும் பாரம்பரிய கட்டிடம் போன்றவற்றை விளக்கும் புகைப்படங்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
காய்கறி கண்காட்சி
மேலும் நாளை, நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடக்கிறது. தொடர்ந்து 13-ந் தேதி, 14-ந் தேதி மற்றும் 15-ந் தேதிகளில் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் 14-ந் தேதி மற்றும் 15-ந் தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடக்கிறது. இதையடுத்து 28-ந் தேதி, 29-ந் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடக்கிறது.
கோத்தகிரி நேரு பூங்காவில் இன்று காய்கறி கண்காட்சி நடைபெறுவதையொட்டி 20 அரங்குகள், விழா மேடை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவர சுமார் 3 டன் எடை உள்ள கேரட், முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயன்படுத்தி பிரமாண்டமான குட்டியுடன் கூடிய ஒட்டகச்சிவிங்கி நிற்பது போன்ற தத்ரூபமான சிற்பம் அமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சிற்பங்கள்
மேலும் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் மக்காத குப்பைகளான டயர், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மான், மயில், காட்டெருமை, முயல், வாத்து உள்ளிட்ட சிற்பங்களும் இடம்பெற உள்ளன. இது மட்டுமின்றி பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
மேலும் பல்வேறு துறைகள் மூலம் அரங்குகளை தயார் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர்(பொறுப்பு) சிபிலா மேரி தலைமையில் தோட்டக்கலைத்துறையினர் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story