ஊட்டியில் நாய்கள் கண்காட்சி தொடங்கியது


ஊட்டியில் நாய்கள் கண்காட்சி தொடங்கியது
x
தினத்தந்தி 6 May 2022 11:56 PM IST (Updated: 6 May 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

கோடை சீசனையொட்டி ஊட்டியில் இன்று நாய்கள் கண்காட்சி தொடங்கியது.

ஊட்டி

கோடை சீசனையொட்டி ஊட்டியில் இன்று நாய்கள் கண்காட்சி தொடங்கியது. 

நாய்கள் கண்காட்சி

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அப்போது நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. மேலும் மலர் கண்காட்சி, படகு போட்டி உள்ளிட்டவை நடைபெறும். 

இதேபோன்று குதிரை பந்தயம் மற்றும் நாய்கள் கண்காட்சி நடக்கிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான நாய்கள் கண்காட்சி ராயல் கேன், தி கோல்டன் ரெட்ரீவன் கிளப் சார்பில் ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதை தி கோல்டன் ரெட்ரீவர் கிளப் இந்தியா துணை தலைவர் சந்திரசேகர், செயலாளர் ராதிகா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் சங்க உறுப்பினர் விக்னேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழ்படிதல் போட்டி

கண்காட்சியில் ஐதராபாத், புனே, கோலாப்பூர், பெங்களூரு, மைசூரு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான நாய்கள் கலந்து கொண்டன. இதில் டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு உள்பட பல வகை நாய்கள் அடங்கும். இந்திய வகை நாயான ராஜபாளையம், சிப்பிப்பாறை உள்ளிட்ட நாய்களும் பங்கேற்றன. தனியார் போட்டியாளர்களுடன், காவல் துறை, ரெயில்வே துறையினரும் தங்களின் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களை கண்காட்சிக்கு அழைத்து வந்தனர். முதல் நாளான இன்று கீழ்படிதல் போட்டி நடந்தது.

இதில் பங்கேற்ற நாய்கள், தங்களது எஜமானர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, அவர்களின் சொல்படி நடந்தது. இதில் நாய்களின் செயல்பாடுகள், பார்வையாளர்களை வியக்க வைத்தது. மேலும் குழந்தைகள் கைதட்டி ரசித்தனர். நாளை (சனிக்கிழமை) பெரிய அளவில் உள்ள நாய்களுக்கும், நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) பொம்மையை போல இருக்கும் சிறிய வகை நாய்களுக்கும் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த ஆண்டு நடக்கும் கண்காட்சியில் 59 வகையில் 603 நாய்கள் கலந்து கொள்கின்றன. அதில் 3 புதிய வகை நாய்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story