அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன் எந்திரம்- லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு


அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன் எந்திரம்- லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 7 May 2022 12:16 AM IST (Updated: 7 May 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சத்திரமனை ஏரியில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன் எந்திரம்-லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்
வெவ்வேறு பதில்
பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனை கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று அதிகாலை முதல் பொக்லைன் எந்திரத்தை கொண்டு தோண்டி எடுக்கப்பட்ட கிராவல் மண் லாரிகள் மூலம் வெளியே எடுத்து செல்லப்பட்டு வந்தது. இதுகுறித்து மதியம் தகவலறிந்த பொதுமக்களும், விவசாயிகளும் ஏரிக்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்கள் பொக்லைன் எந்திரம் ஆபரேட்டர், லாரிகளின் டிரைவர்களிடம் விசாரித்த போது, கிராவல் மண் கலெக்டர் அலுவலகத்துக்கு எடுத்து செல்வதாக கூறினர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் பெரம்பலூர் தாசில்தாரிடம் விசாரித்தனர். அவர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மண் எடுத்து வருவதாக கூறியதாக தெரிகிறது. பொக்லைன் எந்திர ஆபரேட்டர், லாரி டிரைவர்கள் கூறிய பதிலும், தாசில்தார் கூறிய பதிலும் வெவ்வேறாக இருந்தது.
சாலை பணிக்கு...
மேலும் லாரிகளில் பெரம்பலூர்-துறையூர் சாலை பணி என்று போடப்பட்டிருந்தது. இதனால் ஏரி மண் சாலை விரிவாக்க பணிக்கு அனுமதியின்றி அரசு அதிகாரிகளின் துணையோடு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது என்றும், எங்கள் ஊர் ஏரி மண்ணை எடுப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரம், லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏரியில் மண் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது.
அரசு அனுமதியின்றி மண் எடுக்கப்படுகிறது
இதுகுறித்து கிராம மக்கள், விவசாயிகள் கூறுகையில், எங்கள் ஊர் ஏரியில் வண்டல் மண்ணை உள்ளூர் விவசாயிகள் பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி கேட்டால் அரசு விதிமுறைகளை பின்பற்றி அனுமதி பெற வேண்டும், அதற்கு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும், முன்பணம் கட்ட வேண்டும் என்று மக்களை அலைகழித்து மண் எடுக்க விடாமல் அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். ஆனால் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு அரசு அனுமதியின்றி மண் எடுக்க மறைமுகமாக ஆதரவை அதிகாரிகள் அளித்து வருகின்றனர். தற்போது இந்த மண்ணை அலுவலகத்திற்கு எடுத்து செல்வதாக கூறுகிறார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க பொய் அங்கு செல்லவில்லை பொய்யான தகவலை அளிக்கின்றனர். இது சாலை விரிவாக்க பணிக்காக எடுத்து செல்லப்படுகிறது. நாங்கள் எங்கள் ஊர் ஏரி மண்ணை எடுக்க விடமாட்டோம், என்றனர்.

Next Story