10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
x
தினத்தந்தி 7 May 2022 12:36 AM IST (Updated: 7 May 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.

பொதுத்தேர்வு தொடக்கம்
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 40 மையங்களில் அரசின் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழ் தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 8.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். பின்னர் 9.30 மணியளவில் தேர்வின் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தனர். பின்னர் மாணவ-மாணவிகளை, அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்கள் வாழ்த்தி, ஆசிர்வாதம் வழங்கி தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தனர்.
7,886 பேர் எழுதினர்
பின்னர் 9.45 மணியளவில் தேர்வறைக்கு சென்ற மாணவ- மாணவிகளுக்கு சரியாக 10 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பினர். 10.15 மணியளவில் மணிசத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் 143 பள்ளிகளை சேர்ந்த 4,319 மாணவர்களும், 3,776 மாணவிகளும் என 8,095 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தமிழ் தேர்வில் 7,886 பேர் கலந்து கொண்டு எழுதினர்.

Next Story