தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயனற்ற நீர்த்தேக்க தொட்டி
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இனுங்கூர் கிராமம் தெற்கு பள்ளி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது. அவற்றை இன்றுவரை சரிசெய்யாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் வெயில் காலங்களில் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயனற்று உள்ள இந்த நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இனுங்கூர், கரூர்.
கழிவுகள் அகற்றப்படுமா?
கரூர் மாவட்டம் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் மூலி மங்கலம் பிரிவு எதிரே பாலத்துறை, தவிட்டுப்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் வாத்து கோழிகறி விற்பனை செய்யும் கடைகளில் உள்ள கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தவிட்டுப்பாளையம், கரூர்.
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்திலிருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் அதியமான் கோட்டை, ஓலப்பாளையம் பிரிவு சாலை உள்ளது. அதியமான் கோட்டை வழியாக ஓலப்பாளையம் செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் தார் சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புன்னம்சத்திரம், கரூர்.
Related Tags :
Next Story