திருச்சிற்றம்பலம் பகுதியில் மின்தடையால் மாணவர்கள் அவதி


திருச்சிற்றம்பலம் பகுதியில் மின்தடையால் மாணவர்கள் அவதி
x
தினத்தந்தி 7 May 2022 1:50 AM IST (Updated: 7 May 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் திருச்சிற்றம்பலம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் அவதியடைந்தனர். தடையின்றி மின்சாரம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம்:
துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் திருச்சிற்றம்பலம் பகுதியில்  மின்தடை  ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் அவதியடைந்தனர். தடையின்றி மின்சாரம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
துணை மின்நிலையத்தில் பழுது
பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் துணைமின் நிலையத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் நரியங்காடு துணை மின் நிலையத்தின் வாயிலாக திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள 20 கிராமங்கள், நகர பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. 
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் செங்கமங்கலத்தில் உள்ள உயரழுத்த மின்மாற்றியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால்  நரியங்காடு துணை மின்நிலையத்திற்கு செல்லும் மின் இ்ணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.
அதிகாரிகள் விரைவு
இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள், தஞ்சையில் உள்ள மத்திய பண்டகசாலை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு நேற்று மாலை மின் இணைப்பை சரி செய்தனர். இதனால் நேற்று காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் தடைபட்டது.
மாணவர்கள் அவதி
நேற்று காலை முதல் மின்வினியோகம் முழுவதுமாக தடைபட்டதனால், பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற மாணவர்களும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். மின்தடையால் அனைத்து செல்போன் சேவைகளும் முடங்கின. தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தேனீர் கடைகள், உணவு விடுதிகள் போன்றவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
தடையின்றி வழங்க கோரிக்கை 
செங்கமங்கலத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்படுவதால், திருச்சிற்றம்பலம் பகுதியில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
எனவே  செங்கமங்கலம் துணை மின்நிலையத்திலும், அங்கிருந்து நரியங்காடு துணை மின்நிலையம் வரை உள்ள மின் வழித்தடங்களை நிரந்தரமாக சீரமைத்து மின்சாரத்தை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story