மரம் விழுந்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.23 லட்சம் நிவாரண உதவி


மரம் விழுந்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.23 லட்சம் நிவாரண உதவி
x
தினத்தந்தி 7 May 2022 1:58 AM IST (Updated: 7 May 2022 1:58 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே மரம் விழுந்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.23 லட்சம் நிவாரண உதவியை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

நெல்லை:
திருச்செந்தூரில் இருந்து நெல்லை வழியாக பாபநாசம் வரையிலும் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை அருகே பத்தமடை குளக்கரை பகுதியில் அமைந்துள்ள மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று முன்தினம் நடந்தது. அப்போது பத்தமடையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் காதர் மைதீன் (வயது 35), இவருடைய மனைவி பக்கீராள் பானு (29), இவர்களுைடய மகன் ஷேக் மன்சூர் (4), பக்கீராள் பானுவின் சகோதரி ரகுமத் பீவி (27), இவருடைய மகள் அசினா பாத்திமா (7) ஆகிய 5 பேரும் காதர் மைதீனின் ஆட்டோவில் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை காதர் மைதீன் ஓட்டினார்.

பத்தமடை குளத்து பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது, பழமைவாய்ந்த ராட்சத ஆலமரம் வேரோடு சாய்ந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோவில் இருந்த காதர் மைதீன், ரகுமத் பீவி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து சேரன்மாதேவி ரவுண்டானா பகுதியில் உறவினர்கள் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்ததுடன், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்த தலா ரூ.5 லட்சமும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் விபத்து இழப்பீடாக தலா ரூ.5 லட்சமும் என மொத்தம் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தார். 

மேலும் காயம் அடைந்த 3 பேருக்கும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரமும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் தலா ரூ.50 ஆயிரமும் என காயம் அடைந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மொத்தம் ரூ.23 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலைகளை வழங்கினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து, சேரன்மாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் காதர் மைதீன், ரகுமத் பீவி ஆகியோரது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவர்களது உடல், பத்தமடை மலுக்காமலி ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே மரம் விழுந்து 2 பேர் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான நிவாரண தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவர்களின் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும். உரிய பாதுகாப்புடன் சாலை பணியை தொடர வேண்டும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வலியுறுத்தினார்.

இந்த நிலையில், சாலை விரிவாக்கப்பணியின்போது அஜாக்கிரதையாக செயல்பட்டதாக பொக்லைன் ஆபரேட்டர் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த வெயில்ராஜாவை பத்தமடை போலீசார் கைது செய்தனர்.





Next Story