மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்ட முடிவில் மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்ட முடிவில் மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சொந்த வீடு இல்லாத அனைவருக்கும் அரசின் திட்டத்தின் மூலம் இலவச வீடு வழங்க வேண்டும். அரசு புறம்போக்கு இடங்களில் வீடுகள் கட்டி நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அது வரையிலும் வீடுகளை அகற்றும் அரசின் முயற்சிகளை கைவிட வேண்டும். நீண்டகாலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாக்குவாதம்- பரபரப்பு
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் லீமாரோஸ், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்க மோகன், கண்ணன், அந்தோணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக வாசலில் நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிறிது தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் கலெக்டர் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உசூர் மேலாளர் கண்ணன் தலைமையிலான கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அலுவலக வாயிலுக்கு வந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story